மெரினா கடல் அழகை மாற்றுத்திறனாளிகள் பார்த்து மகிழ தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது: தற்காலிக பாதையை நிரந்தரமாக்க வேண்டும்; சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை

சென்னை: மெரினா கடல் அழகை மாற்றுத்திறனாளிகள் பார்த்து மகிழும் வகையில் தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.  தற்காலிக பாதையை நிரந்தரமாக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை மெரினா கடற்கரைக்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இருப்பினும் சாலையில் இருந்து கடற்கரைக்கு சென்று கடலின் அழகை ரசிப்பதற்கு மணலில் நடந்து செல்வது வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகுந்த சிரமமாக இருக்கிறது. அதைப்போன்று மாற்றுத் திறனாளிகளும் கடற்கரைக்கு செல்வது மிகவும் கடினமான விஷயமாகவே இருந்து வருகிறது.

இது தொடர்பாக பலரும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை இணைந்து சென்னை மெரினா முதல் கோவளம் கடற்கரை வரை என மொத்தம் 8 இடங்களில் மாற்றுத்திறனாளிகள் செல்லும் வகையில் தற்காலிக பாதை  ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலைக்கு பின்புறம் 380 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலம், காந்தி சிலை அருகே 125 மீ நீளம் மற்றும் 3 மீட்டர் அகலத்தில் இந்த பாதை  அமைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரை மாற்றுத்திறனாளிகள் கடல் அழகை காணும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.  இந்த பணிகள் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடைபாதை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த தற்காலிக நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக சிறப்பு வாகனங்களும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கடற்கரைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த தற்காலிக பாதையை நிரந்தரமாக வைப்பது குறித்து சென்னை மாநகராட்சி முடிவு எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை நாளை  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி திறந்து வைக்கப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Related Stories: