குடிமராமத்து பணி என கூறி குடிநீர் குளத்தில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றம்: பொதுமக்கள் அதிருப்தி

ஸ்ரீபெரும்புதூர்: சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒட்டி ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் செல்வழிமங்கலம் ஊராட்சியில், குடிநீர் குளம் அமைந்துள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளம் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த குளத்தை அப்பகுதியை சேர்ந்த மக்கள், குடிநீர் ஆதாரமாக பயன்படுத்தி வந்தனர். பின்னர், கிராமம் முழுவதும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து, வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இதனால் இந்த குளத்தை அப்பகுதி மக்கள் குளிப்பதற்கு, பாத்திரம் கழுவ, துணி துவைக்க, வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்துகின்றனர். கடந்த மாதம் பெய்த கனமழையில் இந்த குளத்தில், தண்ணீர் முழுமையாக நிரம்பியது.

இந்நிலையில், தனியார் சிலர் செல்வழிமங்கலம் ஊராட்சி குடிநீர் குளத்தில், குடிமராமத்து பணி என்ற பெயரில் குளத்தில் உள்ள தண்ணீரை மின் மோட்டார்கள் மூலம் வெளியேற்றுகின்றனர். இதை கண்டு அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது.

 செல்வழிமங்கலம் ஊராட்சியில் உள்ள குளம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை பொதுமக்களின் குடிநீர் ஆதாரமாக இருந்தது. நாளடைவில் இந்த குளத்தின் தண்ணீரை வீட்டு உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். அதேபோல், சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் இந்த குளத்தின் தண்ணீரை பயன்படுத்துகின்றனர். மேலும், இந்த குளத்தை ஒட்டி உள்ள கோயில்களுக்கு அபிஷேகம் செய்வதற்கு, குளத்தின் நீர் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஒப்பதந்தம் எடுத்தவர்கள், உடனே குளத்தை சீரமைத்து பணத்தை எடுக்க வேண்டும் என்ற நோக்கில் குளத்தில் உள்ள தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்றி வருகின்றனர். இதுபற்றி ஊராட்சி மன்ற தலைவர், காஞ்சிபுரம் கலெக்டர், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2வது நாளாக இன்றும் (நேற்று) தொடர்ந்து தண்ணீரை வெளியேற்றுகின்றனர்.

 நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. நீர்நிலைகளை பாதுகாக்கவும், நீர் ஆதாரமாக உள்ள குளம், ஏரி, குட்டை ஆகியவற்றை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இருந்தும் குளம் சீரமைப்பு என்ற பெயரில், குளத்தில் நிரம்பியுள்ள தண்ணீரை வெளியேற்றுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக, இந்த விஷயத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தின் நீரை வெளியேற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: