ஒமிக்ரான் பரவல் எதிரொலி பிரதமர் மோடி அவசர ஆலோசனை: கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

புதுடெல்லி: இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அதை தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ேநற்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். நூறு சதவீத தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும்படியும், படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகளை தயார்நிலையில் வைக்கும்படியும் மாநில அரசுகள் கேட்டு கொள்ளப்பட்டுள்ளன. மேலும். ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை தீவிரமாக பின்பற்றும்படியும் அனைத்து மாநிலங்களையும் ஒன்றிய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.  

தென் ஆப்ரிக்காவில் புதிதாக உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் கொரோனா வைரஸ், உலகளவில் 90 நாடுகளில் அதிவேகமாக பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டுமே நாடு முழுவதும் 80க்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று உறுதியானது. இதன்மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 300ஐ  தாண்டியுள்ளது. 2வது அலையில் இந்தியா மட்டுமின்றி, உலகளவில் பெரும் உயிர்ச் சேதத்தையும், பாதிப்புகளையும் ஏற்படுத்திய டெல்டா வைரசை விட, ஒமிக்ரானின் பரவல் வேகம் 3 மடங்கு அதிகமாக இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் தற்போதுதான் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, நாடு இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது. இதுபோன்ற நிலையில் ஒமிக்ரான் பரவல் அதிகமானால், மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிக்க  வேண்டிய கட்டாயத்துக்கு நாடு தள்ளப்படும் அபாயம் உள்ளது. அப்படிப்பட்ட நிலை ஏற்படுவதை தடுக்க, ஒன்றிய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்  தடுப்பூசி  போடுவதை தீவிரப்படுத்தும்படியும், கட்டுப்பாடுகளை கைவிடாமல் தீவிரப்படுத்தும்படியும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகமாகி வருவதால் ஏற்பட்டுள்ள சூழ்நிலைகள், அதை தடுப்பதற்கான அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து, டெல்லியில் பிரதமர் மோடி நேற்று மாலை அவசர ஆலோசனை நடத்தினார். இதில், ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர்,  ஒன்றிய அரசு உயரதிகாரிகள், நிதி ஆயோக் உறுப்பினர்கள், எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாலை 7 மணிக்கு தொடங்கி இந்த கூட்டம், இரவு 9.30 வரை தொடர்ந்தது.

இதில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடுவதை  தீவிரப்படுத்துவது, பண்டிகை கால கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது, ஒமிக்ரான் பரவல் அதிகரித்தால் அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள், மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தயார்நிலையில் வைப்பது. நோய் பரவல் வேகத்தை கண்காணிப்பது உட்பட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், மாநில அரசுகளுக்கு உதவிகள், ஆலோசனைகள் தேவைப்பட்டால் ஒன்றிய நிபுணர்கள் குழுவுக்களை உடனடியாக அனுப்பி வைக்கவும் இதில் முடிவு செய்யப்பட்டது.

ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா வேறு முக்கிய நிகழ்ச்சியில் இருந்ததால், நேற்றைய கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் மோடியுடன் இன்று அவர் ஆலோசனை நடத்திய பிறகு, முக்கிய அறிவிப்புகள் வெளியாவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஒன்றிய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை செயலாளர்களுடன் ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று காலை காணொலி மூலமாக ஆலோசனை நடத்தினார். இதில், தங்கள் மாநிலங்களில் நிலவும் சூழல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதார செயலாளர்கள் விளக்கினர். பின்னர், ராஜேஷ் பூஷன் கூறுகையில், “ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த, மாநில அரசுகள் மிக தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த விதத்திலும் தடுப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட விடக் கூடாது.

அதில், சமரசமும் செய்யக் கூடாது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை தினங்கள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், தேவையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் முழுமையாக பின்பற்ற வேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி என்ற நோக்கில் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை அதிகப்படுத்த வேண்டும். தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் இரவு நேர ஊரடங்கை பிறப்பிக்கலாம். தொற்று உள்ளோரின் மாதிரிகள் உடனடியாக மேல் பகுபாய்வுக்காக அனுப்ப வேண்டும். கேரளாவில் புதிதாக 5 பேருக்கும், கர்நாடகாவில் 12 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.

மோடி வழங்கிய ஆலோசனைகள்

* கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.

* மாநிலங்களுக்கு உதவும் வகையில் ஒன்றிய அரசு அதற்கான உதவி குழுவை அனுப்பும்.

* வைரஸ் பரவலின் வேகத்தை மாநில நோய் தடுப்பு குழு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

* அனைத்து மாநிலங்களும் தடுப்பூசி போடும் இலக்கை 100% சதவீதம் அடைய வேண்டும்.

* நோய் தொற்றை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

Related Stories: