தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு தீவிரம்: 4,730- க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு!!!

சென்னை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு தீவிரம் வருகிறது. நடப்பாண்டில் 4,730- க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்புக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க அரசுடன் பொதுமக்களும் கைகொடுக்க வேண்டுமென பொதுசுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பருவமழை காலத்தில் ஏற்படும் காய்ச்சல் என்பது சாதாரணமாக இருந்தாலும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களை தொடக்க நிலையிலேயே சரிவர கவனிக்க தவறினால் உயிரிழப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே தான் சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் அரசு மருத்துவமனையை அணுக பொதுசுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. தமிழ்நாட்டில் மழைக்காலங்களில் கொசுவினால் ஏற்படக்கூடிய நோய் பாதிப்புகள் தொடர்பான விவரங்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் டெங்கு பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. நடப்பாண்டில் 4,730- க்கும் மேற்பட்டோர் டெங்கு பாதிப்பிற்கு ஆளாகியிருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. டெங்கு பரவலை தடுக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா கொசுவினால் ஏற்படக்கூடிய நோய்ப் பாதிப்புகளின் எண்ணிக்கை குறித்தான புள்ளி விவரங்கள் பொதுசுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 4,730- க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சல் காரணமாக நடப்பாண்டில் 4 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், அதிகபட்சமாக பருவமழை துவங்கிய அக்டோபர் மாதத்தில் 813 பேர் டெங்கு பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். இதில் 669 பேர் தற்போது டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டு டெங்கு பாதிப்புகளை பொறுத்தவரையில் 2017 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 23,294 பேர் பாதிக்கப்பட்டு, 65 பேர் உயிரிழந்தனர். 2018 ஆம் ஆண்டில் 4,486 பேர் பாதிக்கப்பட்டு, 13 பேர் உயிரிழந்தனர். 2019 ஆம் ஆண்டில் 8,527 பேர் பாதிக்கப்பட்டு, 5 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்று பரவல் தொடங்கிய 2020 ஆம் ஆண்டில் கூட 2,410 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். ஆனால், உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. குறிப்பாக, நடப்பாண்டில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகம் கண்டறியப்பட்டுள்ளன.

டெங்கு பாதிப்புகள் அதிகம் கண்டறியக்கூடிய பகுதிகளை கண்டறிந்து உள்ளாட்சி துறையுடன் இணைந்து சுகாதாரத்துறையின் கொசு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பருவமழை காலம் இன்னும் முடிவடையாத சூழலில் பருவமழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படக்கூடிய நோய் பரவலை கட்டுப்படுத்திட பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள சுகாதாரத்துறை வலியுறுத்தியதுள்ளது.      

Related Stories: