புதுக்கோட்டையில் கஞ்சா விற்பனைக்கு உடந்தை எஸ்ஐ, ஏட்டு சஸ்பெண்ட்: மற்றொரு எஸ்ஐ இடமாற்றம்; இன்ஸ்பெக்டருக்கு மெமோ

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகர் பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக வந்த தொடர் புகாரின்பேரில் திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவின்பேரில் தனிப்படை போலீசார் கடந்த 2 மாதங்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடந்த 2 மாதத்துக்கு முன் திருக்கோகர்ணம் ரோட்டில் கஞ்சா விற்ற ஜானகி என்பவரை கைது செய்து 140 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என தனிப்படை போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், புதுக்கோட்டை நகர காவல் நிலைய எஸ்ஐ சந்திரசேகர்(58), திருப்புனவாசல் காவல் நிலைய ஏட்டு முத்துகுமார் (40) ஆகியோர் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்ததும், புதுக்கோட்டை நகர போலீஸ் எஸ்ஐ அன்பழகன், இன்ஸ்பெக்டர் குருநாதன் ஆகியோருக்கும் கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து எஸ்ஐ சந்திரசேகர், ஏட்டு முத்துகுமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் நேற்றுமுன்தினம் இரவு அதிரடி உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் குருநாதனுக்கு மெமோ கொடுக்கப்பட்டது. எஸ்ஐ அன்பழகனை அரிமளம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

* கஞ்சா வியாபாரியுடன் 1600 முறை போனில் பேசிய ஏட்டு

கடந்த சில மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை நகர காவல்நிலையத்தில் பணியாற்றிய திருப்புனவாசல் போலீஸ் ஏட்டு முத்துகுமார், அங்கிருந்த போது 3 மாதங்களில் கஞ்சா வியாபாரி ஜானகியுடன் 1600 முறை போனில் பேசியது தெரிய வந்தது. இதேபோல் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எஸ்ஐ, இடமாற்றம் செய்யப்பட்ட எஸ்ஐ, மெமோ கொடுக்கப்பட்ட இன்ஸ்பெக்டரும் கஞ்சா வியாபாரி ஜானகியுடன் போனில் தொடர்ந்து பேசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: