26ம் தேதி மண்டல பூஜை சபரிமலைக்கு தங்க அங்கி ஊர்வலம் புறப்பட்டது

திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜையின் போது ஐயப்ப சுவாமிக்கு தங்க அங்கி அணிவிக்கப்படுவது வழக்கம். இந்த தங்க அங்கி ஆரன்முளாவில் உள்ள திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருக்கும். இந்த ஆண்டு மண்டல பூஜை வரும் 26ம்தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி ஆரன்முளாவில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து பார்த்தசாரதி கோயிலுக்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. நேற்று (22ம் தேதி) காலை தங்க அங்கி சபரிமலைக்கு ஊர்வலமாக புறப்பட்டது. முன்னதாக அதிகாலை 5  மணிக்கு தங்க அங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் பார்த்தசாரதி கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து  காலை 7 மணியளவில் தங்க அங்கி ரதத்தில் ஊர்வலமாக சபரிமலைக்கு புறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் 25ம் தேதி சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து ஐயப்பன் விக்ரகத்தில் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு தீபாராதனை  காண்பிக்கப்படும்.

Related Stories: