பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் மாஜி அமைச்சர் மீது போதை பொருள் வழக்கு: பஞ்சாப் அரசியலில் பரபரப்பு

சண்டிகர்: பஞ்சாப்பில் பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் பிக்ரம் சிங் மஜிதியா மீது போதை பொருள் வழக்கு பதியப்பட்டுள்ளதால், அம்மாநில அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும், சிரோமணி அகாலி தளத் தலைவருமான பிக்ரம் சிங் மஜிதியா மீது மொஹாலியில் உள்ள மாநில குற்றப் பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இவர், முன்னாள் பஞ்சாப் துணை முதல்வர் சுக்பீர் சிங் பாதல், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், எம்பியுமான ஹர்சிம்ரத் கவுர் ஆகியோரின் உறவினர் ஆவார்.

முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஜெகதீஷ் போலா  என்பவர் கைது செய்யப்பட்டார். முதற்கட்ட விசாரணையில் பிக்ரம் மஜிதியாவின்  பெயரும் அடிபட்டது. ஆனால், இவ்வழக்கு நீதிமன்றத்தால் முடிக்கப்பட்டது. இந்நிலையில் இதே வழக்கில் போதை பொருள் சட்டத்தின் கீழ் பிக்ரம் சிங் மஜிதியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று பஞ்சாப் காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சிரோமணி அகாலி தளத் தலைவர் மீது போதை பொருள் வழக்கு மீண்டும் பதியப்பட்டு இருப்பது, அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: