பாகிஸ்தான் பின்னணி கொண்டவை இந்தியாவுக்கு எதிராக இயங்கிய 20 யூடியூப் சேனல்கள் முடக்கம்: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொய் செய்திகளையும் பரப்பிய பாகிஸ்தான் பின்னணி கொண்ட யூடியூப் சேனல் உட்பட 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை முடக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் நேற்று விடுத்த செய்திக்குறிப்பில், ‘இந்திய இறையாண்மையுடன் தொடர்புடைய உணர்வுப்பூர்வமான விஷயங்களில் பொய் தகவல்களை பரப்பும் விதமாக பாகிஸ்தானில் இருந்து செயல்பட்ட யூடியூப் சேனல்கள் மற்றும் வெப்சைட்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உளவுத்துறையும், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை மூலமாக இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 வெப்சைட்களை முடக்க இணையதள சேவை வழங்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது. இந்த சேனல்கள், காஷ்மீர், மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்கள், ராமர் கோயில் போன்ற தலைப்புகளில் பிளவுபடுத்தும் செய்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது. நயா பாகிஸ்தான் குழுமத்துடன் தொடர்புடைய மற்றும் தனித்து செயல்படும் இந்த சேனல்களின் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 35 லட்சத்திற்கும் அதிகமாகும். இவற்றின் வீடியோக்கள் 55 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளன.

Related Stories: