நீட் விலக்கு சட்டத்துக்கு ஆளுனர் ஒப்புதல் தராமல் இருக்க அரசியல் தான் காரணம்: ராமதாஸ் அறிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிப்பதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டு நாளையுடன் 100 நாட்கள் நிறைவடையவுள்ளன. இன்னும் இதற்கு ஆளுனரின் ஒப்புதல் கூட கிடைக்கவில்லை. ஒரு வேளை பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் குறித்து ஆளுனருக்கு ஏதேனும் ஐயங்கள் இருந்தால் அது குறித்து சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை பெறலாம். இந்த நடைமுறைகளை பின்பற்றினால் கூட ஓரிரு வாரங்களில் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து விட முடியும். ஆனால், 100 நாட்களாகியும் நீட் விலக்கு சட்டத்திற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்காததற்கு அரசியலைத் தவிர வேறு காரணம் இருக்க முடியாது.

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும்படி இரண்டு முறை முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. தமிழக ஆளுனர் இனியும் தாமதம் செய்யாமல் நீட் விலக்கு சட்டத்தை ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். அடுத்த ஆண்டிற்கான நீட் தேர்வு அட்டவணை அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படக்கூடும். அதற்கு முன்பாக அடுத்த ஆண்டில் தமிழகத்தில் நீட் உண்டா, இல்லையா என்பதை தமிழக அரசு உறுதிபட தெரிவிக்க வேண்டும். நீட்டுக்கு விலக்கு பெறும் விஷயத்தில் தமிழக அரசுக்கு அனைத்து வழிகளிலும் ஒப்புதல் அளிக்க பாமக தயாராக உள்ளது. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறவும், தமிழ்நாட்டு மாணவர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: