நகர்ப்புற தேர்தல் நியாயமாக நடத்தக்கோரி வழக்கு மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நேர்மையாகவும், நியாயமாக நடத்துமாறும் மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சியில் 1064 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் உள்ள  3468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் உள்ள 8288 வார்டுகளுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்த கோரி அதிமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அந்த மனுவில் கூறப்பட் டுள்ளதாவது: கடந்த அக்டோபர் 20ம் தேதி ஆளுநரிடமும், ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று தற்போதும் விதிமீறல் நடைபெற்று விட கூடாதென நவம்பர் 1ம் தேதி மாநில தேர்தல் ஆணையத்திடமும் அதிமுக சார்பில் மனு அளித்துள்ளோம். தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவில், உரிய பரிந்துரைகளை அளிக்கும் வகையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும், ஒரேகட்டமாக தேர்தலை நடத்த வேண்டும், தேர்தல் நடவடிக்கைகள் முழுவதும் சிசிடிவி பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும், மத்திய அரசு அதிகாரிகளை தேர்தல் பார்வையாளராக நியமிக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க மத்திய அரசு அதிகாரிகள் அல்லது வெளிமாநிலத்தை சேர்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது ரிசர்வ் படையை பயன்படுத்த வேண்டும். அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் அளித்த மனுவை பரீசிலித்து அதனை அமல்படுத்த உத்தரவிட வேண்டுமெனவும், இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த  உத்தரவிட வேண்டுமெனவும் கோரியுள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதிமுக தரப்பில் விஜய் நாராயண் ஆஜராகி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தவுகளை நகர்ப்புற தேர்தலிலும் பின்பற்ற உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இதுதொடர்பாக ஆணையத்திடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெற்று தெரிவிக்க அவகாசம் கோரினார். இதையடுத்து மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று பதில் மனுதாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: