தொடர் மழையால் சேதமடைந்த வைகை அணை தரைப்பாலம்: பூங்காக்களை பார்க்க கி.மீ கணக்கில் சுற்றும் சுற்றுலாப் பயணிகள்....

தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தொடர்மழையால் நிரம்பியதை அடுத்து கடந்த மாதம் உபரி நீர் திறக்கப்பட்டது. உச்சகட்டமாக 11 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வைகை ஆற்றில் வெள்ளம் சென்றதால் வைகை அணையில் உள்ள தரைப்பாலம் மூழ்கியது. இதனால் தரைப்பாலம் கைப்பிடிச் சுவர்கள் மற்றும் இரும்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன. தரைப்பாலம் சேதமடைந்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி தடுப்பு கம்புகள் மூலம் அடைக்கப்பட்டது.

இதனால் வலதுகரை பூங்காவை பார்த்து விட்டு இடதுகரை பூங்காவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் தரைப்பாலம் வழியாக செல்லமுடியாமல் 2 கி.மீ தூரம் வரை சிரமப்பட்டு சுற்றி வருகின்றனர். எனவே, தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே பாரம்பரியமிக்க வைகை அணையின் பூங்காவை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உடனடியாக தரைப்பாலம், தடுப்புக் கம்பிகளை சீரமைக்க வேண்டுமென வைகை அணை பகுதி வியாபாரிகளும் வலியுறுத்தினர்.            

Related Stories: