ஜனவரி 14ம் தேதி முதல் அர்ச்சகர், பணியாளர்களுக்கு சீருடை கட்டாயம்: அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு

சென்னை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் பொங்கல் பண்டிகையான ஜனவரி 14ம் தேதி முதல் சீருடை அணிந்து வருவது கட்டாயம் என்று ஆணையர் குமரகுருபரன் அரதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:சட்டப்பேரவை அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களில் ஆணையரால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களின் பட்டியலின் அடிப்படையில் அர்ச்சகர்களுக்கு ஜோடி புத்தாடைகள், மற்றும் பணியாளர்களுக்கு இரண்டு ஜோடி சீருடைகள் உரிய வழிமுறைகளை பின்பற்றி தரமான சீருடைகளை அந்தெந்த கோயில் நிதி மூலம் கொள்முதல் செய்து வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அர்ச்சகர், பட்டாச்சாரியர், பூசாரிகளுக்கு ஒன்றரை இஞ்ச் அகலத்தில் மயில்கண் பார்டர் பருத்தி வேஷ்டியும், பெண் பூசாரி மற்றும் பணியாளர்களுக்கு அரக்கு நிறத்தில், மஞ்சள் நிறபார்டருடன் கூடிய புடவை, ஆண் பணியாளர்களுக்கு பிரவுன் நிற கால்சட்டை மற்றும் சந்தன நிற மேற்சட்டை துணி கொள்முதல் செய்து அளிக்கப்பட வேண்டும். அனைத்து பணியாளருக்கும் ஒரே மாதிரியான சீருடை கொள்முதல் செய்து வழங்க வேண்டும். நிதி இல்லாத கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள், சீருடைகள் வழங்க அவரவர் சரகத்தில் உள்ள நிதிவசதி உள்ள கோயில்கள் மூலம் நிதி பெற்று சீருடை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்பணியினை வருகிற 31ம் தேதிக்குள் முடித்து அறிக்கை அனுப்ப மண்டல இணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. மேலும், இந்த சீருடை மற்றும் புத்தாடைகளை தமிழர் திருநாளாம் தைத்திங்கள் முதல் நாளில் இருந்து பணிக்கு வரும் போது தவறாமல் அணிந்து வர அனைத்து பணியாளர்களுக்கும் அறிவுறுத்தவும் அனைத்து கோயில் அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.இந்த செலவினத்திற்கு வரவு, செலவு திட்ட மதிப்பீடுகளில் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி பெற்றுக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: