மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி எங்கே போனார்? அதிமுக விஐபிக்கள் 600 பேரின் செல்போன் எண்கள் கண்காணிப்பு: சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் தனிப்படை தீவிர தேடுதல் வேட்டை

விருதுநகர்: ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்து தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கண்டுபிடிக்க அவரது ஆதரவாளர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் என 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன், முன்னாள் அமைச்சர் காளிமுத்து தம்பி விஜயநல்லதம்பி உள்ளிட்டோர் ஆவினில் வேலைக்காக பலரிடமும் ரூ.3 கோடி பெற்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரின் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோரிடம் அளித்ததாக தெரிவித்தனர். இந்தப் புகாரில் 4 பேர் மீதும் 5 பிரிவுகளில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில், மோசடி வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதையடுத்து கடந்த மூன்று நாட்களாக ராஜேந்திரபாலாஜி தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ் தலைமையில் 6 தனிப்படைகள் தேடி வருகின்றன. இந்நிலையில் ராஜேந்திரபாலாஜியின் அக்கா மகன்கள் வசந்தகுமார் (38), ரமணா (34), கார் டிரைவர் ராஜ்குமார் (47) ஆகியோரிடம் தனிப்படையினர் 15 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதற்கிடையே முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி மனுதாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இருந்து கிளம்பி, 3 வெவ்வேறு கார்களில் பயணம் செய்து தப்பி தலைமறைவாகியுள்ளார். முதலில் தஞ்சம் புகுந்த இடத்திலேயே அவர் இருப்பதாக தெரிகிறது. வேறு இடம் மாறியிருந்தால் சிக்கி இருப்பார். உறவினர்களை அவர் தொடர்பு கொள்ளவில்லை. அவரது செல்போன்கள், தொடர்பாளர்களின் செல்போன் எண்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. ராஜேந்திரபாலாஜியை பிடிப்பதற்காக அவரது தொடர்பாளர்கள், ஆதரவாளர்கள், அதிமுக முக்கிய நபர்கள் என 600 பேரின் செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவர்கள் உதவியுடன் அவரை விரைவில் கைது செய்வோம்’’ என்று தெரிவித்தனர்.

Related Stories: