லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் ஒரு குற்றவாளி: பதவி விலக வலியுறுத்தி ராகுல் ஆவேச பேச்சு; நாடாளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதுடெல்லி: ‘லக்கிம்பூரில் காரை மோதி விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா ஒரு குற்றவாளி. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்,’ என்று மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் ஒன்றிய உள்துறை அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சென்ற கார் மோதி 4 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.

இது பற்றி விசாரித்து வரும் சிறப்பு புலானய்வு குழு, ‘விவசாயிகள் மீது நடத்தப்பட்டது திட்டமிட்ட தாக்குதல்,’ என்று இருதினங்களுக்கு முன் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் முதல் கிளப்பி வரும் எதிர்க்கட்சிகள், ‘ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும். விசாரணை அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும்,’ என்று வலியுறுத்தி வருகின்றன. நேற்று முன்தினமும் இப்பிரச்னையால் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்ட நிலையில், நேற்று காலை மக்களவை தொடங்கியதும் அஜய் மிஸ்ராவை பதவி விலக வலியுறுத்தி, அவையின் மையப்பகுதிக்கு வந்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முழக்கமிட்டனர்.

அதே நேரம், கேள்வி நேரத்தில் பேசும்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சபாநாயகர் ஓம் பிர்லா அழைத்தார். ஆனால், கேள்விகளை கேட்காமல் லக்கிம்பூர் விசாரணை அறிக்கை பற்றி பேசத் தொடங்கினார். ‘அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் ஒரு குற்றவாளி,’ என்று ராகுல் ஆவேசமாக பேசினார். எதிர்க்கட்சிகளின் அமளி அதிகமாக இருந்ததால், மக்களவை தொடங்கிய சிறிது நேரத்தில் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், 2 மணிக்கு அவை தொடங்கியவுடன் உயிரியல் பன்முகத்தன்மை மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால்,  நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை காலையில் தொடங்கியதும் ‘விஜய் திவாஸ்’ 50வது ஆண்டையொட்டி உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும்படி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், முதலில் பிற்பகல் வரையிலும், அதன் பிறகு நாள் முழுவதும் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.

* வருண் சிங் மறைவுக்கு இரங்கல்

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரூப் கேப்டன் வருண் சிங் நேற்று முன்தினம் இறந்தார். அவருடைய மறைவுக்கு மக்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் செய்தியை வாசித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

* விவசாயிகள் படுகொலை தொடர்பாக ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும்படி வலியுறுத்தி, உத்தரப் பிரதேசத்தில் சட்டப் பேரவை கட்டிடத்துக்கு வெளியே காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: