இத்தலார் பஜாரில் கண்ணாடிகளால் சூழப்பட்ட நவீன பேருந்து நிழற்குடை ஊர் பொது நிதி மூலம் பொதுமக்களே அமைத்தனர்

மஞ்சூர்: மஞ்சூர் அருகே ஊர் பொது நிதி மூலம் பொதுமக்களே இத்தலார் பஜார் பகுதியில் கண்ணாடிகளால் சூழப்பட்ட நவீன பேருந்து நிழற்குடை மற்றும் நுழைவு வாயிலை அமைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது இத்தலார். படுகரின மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி மற்றும் மஞ்சூர் பகுதிகளில் இருந்து இத்தலார் வழி தடத்தில் தினசரி அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிராமத்தின் முக்கிய பகுதியான இத்தலார் பஜாரில் பேருந்து நிழற்குடை இதுவரை அமைக்கவில்லை. இதனால் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகள் பெரிதும் அவதிபட்டு வந்தார்கள். குறிப்பாக காற்று மழைக்காலங்களில் பேருந்துகள் வரும் வரை ஒதுங்கக்கூட வழியின்றி சாலையோரங்களில் தஞ்சமடையும் நிலை உள்ளது. இதைத்தொடர்ந்து இத்தலார் ஊர் பொதுமக்களே பயணிகளின் வசதிக்காக பேரூந்து நிழற்குடை அமைக்க முடிவு செய்தார்கள்.

ஊர் பொது நிதியின் மூலம் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் இத்தலார் பஜாரில் முழுவதும் கண்ணாடிகளால் சூழப்பட்ட நவீன பேருந்து நிறுத்த கட்டிடம் கட்டப்பட்டது. இதேபோல் இத்தலார் கிராம முகப்பில் ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் வரவேற்பு நுழைவு வாயிலும் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நவீன பேருந்து நிழற்குடை மற்றும் முகப்பு நுழைவு வாயில் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இத்தலார் ஊர் தலைவர் சுரேஷ் முன்னிலையில் ஊராட்சி தலைவர் பந்தையன், பீமன், நரேந்திரன், லட்சுமணன், ராமன், போஜன், நேரு, குபேரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேருந்து நிழற்குடை மற்றும் நுழைவு வாயிலை திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர்கள் கலந்து கொண்டார்கள்.

Related Stories: