குற்றாலத்தில் கோலாகலம் திருவாதிரை திருவிழா தேரோட்டம்

தென்காசி: குற்றாலத்தில் திருவாதிரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர். வருகிற 20ம் தேதி ஆருத்ரா தரிசன தாண்டவ  தீபாராதனை நடக்கிறது. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில்  ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா, கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று காலை 9 மணிக்கு மேல் ஐந்து தேர்கள் ஓடும் தேரோட்டம் நடந்தது.   முதலில் விநாயகர் தேரும், தொடர்ந்து முருகர், நடராஜர், குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்மன்  ஆகிய தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக இழுக்கப்பட்டது.  பூஜைகளை ஜெயமணி சுந்தரம்  பட்டர், கணேசன் பட்டர், பிச்சுமணி என்ற கண்ணன் பட்டர், மகேஷ் பட்டர்  ஆகியோர் நடத்தினர். சிவனடியார்களின் சிவபூதகண வாத்தியங்களும்  இசைக்கப்பட்டன.

இதில் இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி  ஆணையர் கண்ணதாசன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், திருவிளக்கு பூஜை  கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன், அகஸ்தியர் சன்மார்க்கம்  முத்துக்குமாரசாமி, சர்வோதயா ராதாகிருஷ்ணன், கண்ணன், தென்காசி மேற்கு  ஒன்றிய திமுக செயலாளர் ராமையா, ஆதிதிராவிடர் நல அணி சுரேஷ், குற்றாலம்  இசக்கிபாண்டியன், சண்முகம், பாஜ செந்தூர்பாண்டியன், திருமுருகன், வர்த்தக  சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழாவில் 18ம் தேதி  காலை 10 மணிக்கு மேல் சித்திரசபையில் நடராஜமூர்த்திக்கு பச்சைசாத்தி  தாண்டவ தீபாராதனை நடக்கிறது. 20ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மேல் சித்திரசபையில் நடராஜமூர்த்திக்கு ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை, 5 மணிக்கு  மேல் திரிகூட மண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை 9.30 மணிக்கும், இரவு 7 மணிக்கும்  நடராஜ பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை இந்துசமய  அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர்கள் சங்கர், கண்ணதாசன்  மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: