வீட்டுமனை பட்டா வழங்ககோரி கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை தாலுகா ஆத்துப்பாக்கம் ஊராட்சி அரியபாக்கம் ஆதிதிராவிடர் புதிய காலனியை சேர்ந்த பொதுமக்கள் விசிக மாநில செயலாளர் நீலவானத்து நிலவன் தலைமையில் ஜி.டி.வேலுமயில், தண்டலம் தமிழ்ச்செல்வன், அறிவுச்செல்வன், கவியரசு, தென்னரசு, தங்கராசு, பிரசாத் உள்பட 50க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு: ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு எதிரில் ஆரணி ஆற்று புறம்போக்கு நிலத்தில் ஏழை, எளிய 35 ஆதிதிராவிட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடிசை போட்டு வசித்து வந்தோம்.

கடந்த 2006ம் ஆண்டு அந்த இடத்திலிருந்து எங்களை அப்புறப்படுத்திவிட்டனர். பிறகு மாற்று இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தனித்தனியாக 35 குடும்பங்களுக்கும் வீட்டுமனை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, 35 குடும்பத்தினரும் அங்கு குடிசை போட்டு வசித்து வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. எனவே எங்களுக்கு வீட்டுமனை வழங்கி மத்திய அரசின் தொகுப்பு வீடு அல்லது மாநில அரசின் பசுமை வீடு போன்ற திட்டங்களில் தங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என கடந்த 15 ஆண்டு காலமாக கேட்டு போராடி வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து பலமுறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்து போராடி வருகிறோம். ஆனால் இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Related Stories: