எவன்டி உன்ன பாக்கப் போறான்?

நன்றி குங்குமம் தோழி

என்ன செய்வது தோழி

அன்புடன் தோழிக்கு, எனக்கு வயது 38. கல்லூரி 2ம் ஆண்டு படிக்கும்போதே திருமணம். படிக்க வேண்டும் என்பதற்காக முதலில் மறுத்தேன். ‘கவலை வேண்டாம் மாமியார் வீட்டில் படிக்க வைப்பார்கள்’ என்றனர். ஆனால் திருமணமானதும் மாமியார் வீட்டில், ‘படிச்சி என்ன பண்ணப்போற... வீட்டு வேலய பாரு’ என்று சொல்லிவிட்டனர். நான் அழுது அடம் பிடித்தும் பலனில்லை. என் வீட்டுக்கு சொல்லி அனுப்பினேன், அவர்களோ, ‘இனிமே உனக்கு புகுந்த வீடுதான் எல்லாம். அவங்க சொல்ற மாதிரி நடந்துக்கமா’ என்று சொல்லிவிட்டனர். என் கணவரோ, ‘இப்படி ஒரு விஷயம்’ நடப்பது போல் காட்டிக் கொள்ளவில்லை. ‘நான் படிக்க வேண்டும்’ என்று சொன்னதை அவர் கண்டுக் கொள்ளாதது அதிர்ச்சியாக இருந்தது.

நான் ஒல்லியாக இருப்பேன். வீட்டில் ‘சின்னப்பெண்தானே.... கல்யாணம் ஆனதும் சரியாகிவிடும்’ என்றார்கள். நானும் அப்படித்தான் நம்பினேன். ஆனால் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆகிவிட்டன.

நான் இன்னும் குண்டாகவில்லை. இப்போது 2 பிள்ளைகள். ஒருவன் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். இன்னொருத்தன் 11ம் வகுப்பு படிக்கிறான். அன்பான பிள்ளைகள். மாமியார், நாத்தனார் பிரச்னைகள் பெரிதாக இருந்ததில்லை. வசதிக்கும் பிரச்னையில்லை. படிக்க முடியவில்லையே என்ற ஒரு குறையை தவிர வாழ்க்கை அதன் போக்கில் இயல்பாக போய்க் கொண்டிருந்தது. ஆனால் கணவர் என்னிடம் அன்பு காட்டியதும் இல்லை, ஆதரவாக இருந்ததில்லை. வெளியில் அதிகம் கூட்டிச் செல்லமாட்டார். கேட்டால் ‘எதுக்கு வீணா அலையப்போற. நான் போய்ட்டு வந்துடுறேன்’ என்பார். எனக்கும் அது சரியாகவே தோன்றும். அதே நேரத்தில் கல்யாணம், குடும்ப நிகழ்ச்சிகள், கோவில் என குடும்பமே ஒன்றாக போவது அடிக்கடி நடக்கும். அதனால் வெளியில் போக முடியவில்லையே என்று ஏங்கியது இல்லை.

சின்ன வயதிலேயே திருமணம் என்பதால், எனக்கு வாழ்க்கை குறித்த பெரிய எதிர்பார்ப்பு இருந்ததில்லை. எங்கள் வீட்டில், ‘மாமியார் சொல்வது போல் நடந்து கொள். அவ்வளவுதான் பிரச்னை வராது’ என்றார்கள். இன்று வரை அப்படித்தான் நடந்து கொள்கிறேன். கணவர் பேச்சையும் தட்டியதில்லை. ஆனால் சமீபகாலமாக அவர் பேசும் வார்த்தைகள்தான் என்னை குத்தீட்டிகளாக குத்துகின்றன. திருமணம் ஆனதில் இருந்தே அவர் அப்படித்தான் பேசி வந்திருக்கிறார். எனக்கு அப்போது புரியவில்லை. இப்போதுதான் அவர் என்னை எவ்வளவு கேவலமாக நடத்தியிருக்கிறார் என்பது புரிகிறது. எங்காவது போகும்போது ‘என் உடை அலங்காரம் எப்படி இருக்கிறது’ என்று அவரிடம் தவறாமல் கேட்பேன். அப்போது, ‘எவன்டி உன்ன பாக்கப் போறான்’ என்று சொல்வார்.

அதற்கு நான், ‘எவனும் என்னை பாக்க வேணாம். நீங்க மட்டும் பாத்தா போதும்’னு சொல்வேன். அவரும், ‘அதைத்தான் நானும் சொல்றேன். நீ எப்படியிருந்தாலும் நான்தான் பாக்கப்போறேன். எதுக்கு தேவையில்லாமல் அலங்காரம்’ என்பார். சில நேரங்களில், ‘நீ எத்தனை அலங்காரம் பண்ணாலும் உன் அழகு கிட்ட அதெல்லாம் தோத்துப்போகும்’ என்பார். கூடவே ‘உன் நிஜ அழகு முன்னாடி இந்த அலங்காரமெல்லாம் தூசிடீ’ என்பார். நான் அதையெல்லாம் பாராட்டுகளாகத்தான் எடுத்துக் கொள்வேன். ஆனால் அவர் கிண்டலாக பேசியதை உணர்ந்ததில்லை. சமீபத்தில் குடும்ப நிகழ்ச்சி ஒன்றுக்காக ‘டிசைனர் ஜாக்கெட்’ தைக்க முடிவு செய்திருந்தேன். அதனால் அவரை ‘டைலர்’ கடைக்கு கூட்டிட்டு போகச் சொன்னேன்.

அப்போது அவர், ‘அதெல்லாம் வேஸ்ட். வேலையை பாரு’ என்றார். அவர் காசு செலவாகும் என்று சொல்கிறாரோ என்று நினைத்து, ‘காசு நான் வச்சிருக்கேன்.

நீங்க ஒண்ணும் தர வேணாம்’ என்றேன். அவரோ, ‘யார் காசாக இருந்தாலும் எடுப்பாக இருக்க போறதில்லை. அதான் சொன்னேன்’ என்று கிண்டலாக சொன்னார். அப்போதுதான் அவர் இத்தனை நாட்கள் பேசிய வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் புரிந்தன. கூடவே வலித்தது. அவர் என் உடலமைப்பைத் தான் இத்தனை நாட்களும் கேலி, கிண்டல் செய்துள்ளார். ‘இப்படி கேவலமாக பேசறீங்களே’ என்று அவரிடம் சண்டை போட்டேன். உடனே ‘உண்மையைச் சொன்னால் கோபப்படக்கூடாது செல்லம்’ என்றார். இத்தனை நாட்கள் ‘நீ அழகு... அழகுனு கொஞ்சினீங்களே’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நானும் மனுஷன்தானே... முகம் லட்சணமாக இருந்தால் போதுமா.... ’ என்று அவர் பேசியதெல்லாம் எழுத எனக்கு கூச்சமாக இருக்கிறது. திருமணத்தின் போது எப்படி இருந்தேனோ அதேபோல்தான் இப்போது இருக்கிறேன்.

என்னை விட ஒல்லியானவர்கள் இருக்கிறார்கள். நான் ஒன்றும் அவ்வளவு ஒல்லி இல்லை. இப்படி வேண்டா வெறுப்பாக ஏன் திருமணம் செய்தார்கள் என்று விசாரித்த போது. நான் நொந்துப்போகும் அளவுக்குதான் விவரங்கள் வரிசைக்கட்டின. சின்னப்பெண் என்றால் யாரையும் காதலித்து இருக்க மாட்டாள் என்றுதான் என்னை போன்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து இருக்கிறார்கள். நான் ஒல்லியாக இருந்ததற்காக எனது கணவர் தயங்கிய போது, ‘சின்னப் பெண் அப்படித்தான் இருப்பாள்.... திருமணமாகி குழந்தை பிறந்தால் சரியாகி விடும்’ என்று அவங்க அப்பா, அம்மா சொன்னதை கேட்டு என்னை திருமணம் செய்து கொண்டாராம். அதுமட்டுமல்ல குழந்தை பிறந்ததும் அவர் ‘நினைத்த’ மாற்றங்கள் என்னிடம் ஏற்படாததால் நொந்து போய்விட்டாராம். ஆனாலும் பிள்ளைகளுக்காக ‘அட்ஜெஸ்ட்’ செய்து கொண்டு வாழ்கிறாராம். வேறு யாராக இருந்தாலும் விவாகரத்து செய்து இருப்பார்களாம்.

இவருக்கு நல்ல மனதாம்... பொறுத்துக் ெகாண்டு இருக்கிறாராம். அந்த சம்பவத்துக்கு பிறகு அந்த நல்ல மனதுக்காரர், குத்தி பேசுவதும், கேலி செய்வதும் வெளிப்படையாகவே இருக்கின்றன. எங்காவது செல்ல தயாராகி கொண்டிருந்தால், நக்கலாக பார்த்து சிரிக்கிறார். மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. அது அவருக்கு தெரியவில்லை. அவருக்கு எப்படி பிடிக்குமோ அப்படிப்பட்ட பெண்ணை பார்த்து திருமணம் செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு இப்போது, அதுவும் திருமணமாகி 19 ஆண்டுகள் ஆன நிலையில் என்னை சொற்களால் வதைத்துக் கொண்டிருக்கிறார். இப்படியும் கட்டிய மனைவியை ஒருவரால் வெறுக்கவும், கேலி செய்யவும் முடியுமா? என் உடல் எப்படி இருக்க வேண்டும் என்று நானா முடிவு செய்தேன்.

மிகவும் கஷ்டமாக இருக்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு மட்டும் ஏன் இப்படி என்றும் புரியவில்லை. நிம்மதியில்லாமல் தவிக்கிறேன். எதை பார்த்தாலும் எரிச்சலாக இருக்கிறது. அதிலும் அவரை பார்த்தால் கோபமாக வருகிறது. ஒழுங்காக படித்திருந்தால் நல்ல வேலைக்கு போயிருப்பேன். இப்போது அதற்கு வழியில்லாமல் செய்து விட்டு என்னை பழிக்கிறார்கள். என்ன செய்வது? என் மனதை புரிந்து கொண்டு அவர் மாற வழி இருக்கிறதா? பிள்ளைகள் செட்டிலானதும் அவர்களுடன் தனியாக போய் வாழலாம் என்று நினைக்கிறேன். அது சரிவருமா? எனக்கு வழிகாட்டுங்கள் தோழி. இப்படிக்கு, பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

நட்புடன் தோழிக்கு,

இளம் வயதில் திருமணம், கல்வி கற்க வாய்ப்பு மறுப்பு, கணவர் வீட்டில் சொல்வதை கேட்டு நடக்க வேண்டிய சூழல் என பல கஷ்டங்களை கடந்து வந்துள்ளீர்கள். உங்கள் கணவரை புரிந்து கொள்ள உங்களுக்கு இவ்வளவு காலம் தேவைப்பட்டு இருக்கிறது. கல்யாணமானதிலிருந்தே அவர் உங்களை இப்படித்தான் நடத்தியுள்ளார். ஆனால் அதை புரிந்துகொள்ளும் பக்குவம் இப்பொழுது தான் உங்களுக்கு வந்துள்ளது. உங்கள் கணவரை பொறுத்தவரை குடும்ப சூழ்நிலை காரணமாக உங்களை திருமணம் செய்துள்ளார். திருமணம் ஆனதில் இருந்தே உங்களுடன் மனரீதியான நெருக்கமும் உணர்வு ரீதியான நெருக்கமும் இல்லாமல் இருந்துள்ளார். உங்களைப் பற்றிய மதிப்பீடுகளை குறைவாக வைத்து உள்ளார்.

அவர் எப்பொழுதும் போல் தான் உள்ளார். நீங்கள்தான் அவரை புரிந்து கொள்ளாமல் இருந்துள்ளீர்கள். கணவர் என்பவர் மனைவியை மனப்பூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் நேசிக்கவேண்டும். அப்பொழுதுதான் மனைவி பற்றிய மதிப்பீடுகள், விருப்பு வெறுப்புகள், உணர்ச்சிகள் போன்றவற்றை கணவரால் புரிந்து கொள்ள முடியும். கணவன்-மனைவி உறவு என்பது  மனைவிக்குப் போதுமான இடம் கொடுத்தல், அவளின் உணர்வுகளை மதித்தல், அறிவுப்பூர்வமாக அவளைப் புரிந்துகொள்ளுதல், மதிப்பீடுகளை உயர்வாக வைத்தல், அன்பு காட்டுதல், அக்கறை காட்டுதல், சரிசமமாக நடத்துதல், போதுமான சுதந்திரம் கொடுத்தல் இவற்றையெல்லாம் உள்ளடக்கியது.

அவர் திருமண வாழ்க்கையில் ஈடுபட வேண்டும் என்பதற்காக உடல் ரீதியான நெருக்கம் மட்டுமே காட்டி உள்ளார். அதனால்தான் உங்கள் உடல் வாகை பற்றி அவர் குறைவாக மதிப்பிட்டுள்ளார். மனைவியை மனதிலிருந்து நேசிக்கும் பொழுது உடல்ரீதியான மதிப்பீடு பெரிய பங்கு வகிக்காது. உங்களை காயப்படுத்தி இருக்கமாட்டார். நீங்களே உங்களுக்கு தெரிந்த ஒல்லியாக உடல்வாகு இருந்தும் பலர் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர் என்று கூறியுள்ளீர்கள். எனவே இது எல்லாம் ஒரு குறையே கிடையாது. மனைவி எதிர்பார்ப்பது போல் எத்தனை கணவர்கள் இருக்கிறார்கள்? ஏன் உங்கள் கணவரே உங்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை தானே. அவ்வாறிருக்க நீங்கள் மட்டும் ஏன், அவர் எதிர்பார்த்ததுபோல் இல்லை என்பதற்காக வருத்தப்படுகிறீர்கள்.

அவரைப் பொறுத்தவரை, நீங்கள் அவர் குழந்தைகளுக்கு தாய். அவ்வப்போது மனைவி அவ்வளவுதான். இதை ஏற்றுக் கொண்டு தான் நீங்களும் இவ்வளவு காலம் வாழ்ந்து உள்ளீர்கள். மனப்பூர்வமாக உணர்வுபூர்வமாக உங்களை நேசிக்க தெரியாதவர், இனியா மாறப் போகிறார். அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. நீங்களும் சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும். இனிமேல் அவர் எதிர்பார்த்தது போல் உடல்ரீதியான அமைப்பைப் பெறுவதெல்லாம் சிக்கலான விஷயம். அவர் எதிர் மறையாக பேசினாலும் வருந்த வேண்டாம், அவரின் இயல்பு அதுதான். அதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். தாழ்வு மனப்பான்மை வேண்டாம்.

சில நேரங்களில் அவர் புகழ்ந்தாலும் அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களின் உடல் வாகுக்கு நீங்கள் பொறுப்பல்ல. எதையும் நினைத்து வருந்தாமல் இயல்பாக இருங்கள். கடந்தகாலத்தைப்பற்றி யோசித்து பயனில்லை. நீங்கள் உங்கள் கணவரை பற்றிய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் உங்கள் பிள்ளைகளை கவனியுங்கள். நீங்கள் கோபப்படுவதால் அவர் மாறி விடப் போவதில்லை. உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துங்கள். அவரிடம் எதிர்பார்ப்பு இல்லாமல் பழகுங்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். அவ்வாறு செய்தாலே இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நிம்மதியாக வாழலாம்.

தொகுப்பு: ஜெயா பிள்ளை

Related Stories: