15 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய கண்மாய்: பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய கிராம மக்கள்

திருமங்கலம்: கடந்த 15 ஆண்டுகளாக வறண்டு கிடந்த கூராங்குளம் கண்மாய், அதிகாரிகள் எடுத்த துரித நடவடிக்கையால் நிரம்பி மறுகால் பாய்ந்ததால் கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். திருமங்கலம் தாலுகாவில் பெரிய கண்மாய்களில் ஒன்று கூராங்குளம் கண்மாய். கீழக்கோட்டை பஞ்சாயத்து லட்சுமியாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள இந்த கண்மாய் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பாசன கண்மாய்களில் ஒன்றாக திகழ்ந்தது. சுமார் 175 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கண்மாய் மூலமாக கீழக்கோட்டை, லட்சுமியாபுரம், மல்லம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. இதன் அருகேயுள்ள வடகரை மற்றும் விடத்தகுளம் கண்மாய்கள் நிரம்பியுள்ள நிலையில் கூராங்குளம் கண்மாயில் மட்டும் கிடங்கில் தண்ணீர் கிடந்தது விவசாயிகளிடம் வேதனையை உண்டாக்கியது.

இதுதொடர்பாக கிழக்கோட்டை முன்னாள் ஊராட்சி தலைவர் தனுஷ்கோடி தலைமையில் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறையில் மனு கொடுத்தனர். தண்ணீர் திறக்க கோரி கடந்த சில தினங்களுக்கு முன்பு கிராம மக்கள் கண்மாயில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் கூராங்குளம் கண்மாய்க்கு, கடந்த சில தினங்களாக பெய்த மழையால் தண்ணீர் வர துவங்கியது. நேற்று மாலை கண்மாய் நிரம்பி தண்ணீர் மறுகால் பாய்ந்தது. இதனால் கீழக்கோட்டை, லட்சுமியாபுரம் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மறுகால் பாயும் பகுதியில் பொங்கல் வைத்து வழிபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையால் கடந்த 15 ஆண்டுகளுக்கு பின்பு எங்கள் கூராங்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால் எங்கள் மூன்று மூன்று கிராம விவசாயம் செழிப்படையும்’ என்றனர்.

Related Stories: