மக்களவையில் சோனியாகாந்தி கடும் கண்டனம்: சிபிஎஸ்இ ஆங்கில தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்: மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிப்பு

புதுடெல்லி: மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கிலத்தேர்வில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விகள் நீக்கப்பட்டு, மாணவர்களுக்கு அதற்குரிய முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.  சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வுகள் நடந்து வருகிறது. இதில் கடந்த 11ம் தேதி நடந்த 10ம் வகுப்பு ஆங்கில தேர்வுக்கான  வினாத்தாளில் மனைவிகள் கணவர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதை பின்பற்றுவதில்லை.இதனால் குழந்தைகள் ஒழுக்கமாக வளர்வதில்லை என்று கேட்கப்பட்டிருந்தது.

இந்த கேள்வியால் கடும் சர்ச்சை ஏற்பட்டது. பிற்போக்குத்தனமான கேள்வி என பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலகள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் மக்களவையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று பேசுகையில், ‘சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு கேள்வித்தாள் விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும்  கேள்வி எப்படி இடம் பெற்றது என விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.’ இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாக தேர்வு கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் நேற்று  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘கடந்த 11ம் தேதி நடந்த 10 வகுப்பு  ஆங்கில தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளால் நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து  கல்வி நிபுணர்கள் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் சர்ச்சையான கேள்விகள் அனைத்தும் நீக்கப்படுகின்றது.  மேலும் அதற்கு உண்டான முழு மதிப்பெண்களும் மாணவர்களுக்கு வழங்கப்படும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்று எந்த பிரச்சனைகளும் வராத அளவிற்கு அனைத்து நடவடிக்கைகளும் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது’.

Related Stories: