சிபிஎஸ்இ கேள்வித்தாள் விவகாரம்; ஒன்றிய அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்..! நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி கண்டனம்

புதுடெல்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வுக்கான வினாத்தாளில் பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை பற்றிய கேள்வி கேட்கப்பட்டிருந்ததற்கு நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்தார்.  சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கு கடந்த சனிக்கிழமை ஆங்கில தேர்வு நடந்தது. இதற்கு, வழங்கப்பட்ட வினாத்தாளில், பெண்கள் மற்றும் குடும்ப வாழ்க்கை நடைமுறைகள் பற்றிய கேள்விகள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, ‘கணவனின் பேச்சை கேட்டால்தான் குழந்தைகளின் கீழ்படிதலை தாயால் பெற முடியும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்து விடுகிறது’ என்பது போன்ற கருத்துகள் வினாத்தாளில் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாலின பாகுபாடு, பிற்போக்குத்தனம் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில் சிபிஎஸ்இ வினாத்தாள் இருப்பதாக பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, தனது ட்விட்டர் பதிவில், ‘தம்மால் நம்பவே முடியவில்லை; இதுபோன்ற அபத்தமான கருத்துகளை தான் குழந்தைகளுக்கு கற்று கொடுக்கிறோமா’ என கேள்வி எழுப்பியுள்ளார். பாஜ அரசு இந்த பிற்போக்குத்தனமான கருத்துகளை ஆதரிப்பதாக விமர்சித்துள்ள பிரியங்கா காந்தி, இந்த கருத்துகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஏன் இடம்பெற வேண்டும் என்று வினவினார். இதனிடையே, 10ம் வகுப்பு ஆங்கில பாடத்தேர்வு வினாத்தாள், விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய பாடத்திட்ட குழுவுக்கு அனுப்பப்பட்டுளதாக சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் இன்று காலையில் நாடாளுமன்ற கூட்ட தொடங்கியது.

இதில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, இதுகுறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது, ‘சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வில் பெண்கள், குடும்ப வாழ்க்கை பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது மிகவும் அபத்தமானது. இதுபோன்றவற்றை ஏற்க முடியாது. உடனடியாக சிபிஎஸ்இ நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றார். இதற்கிடையில், 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை குறிப்பிட்டு, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அரசாங்கம் “பிடிவாதமாக” இருப்பதாகவும், சபை நடவடிக்கைகளை சீர்குலைக்கும்படி கட்டாயப்படுத்துவதாகவும் கூறினார். அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாகவும் கார்கே அறிவித்தார். அவைத் தலைவர் வெங்கையா நாயுடு சபையை ஒழுங்குபடுத்த முயன்றார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து தங்கள் கருத்தை எழுப்பினர். இதையடுத்து நாயுடு அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.

Related Stories: