பாலியல் குற்றவாளிக்கு எதிராக போராட்டம் நடத்திய பெண்கள் மீது பொய் வழக்கு: கே.பாலகிருஷ்ணன் டிஜிபியிடம் நேரில் கடிதம்

சென்னை: பாலியல் குற்றவாளிக்கு எதிராக போராட்டம் நடத்திய மாதர் சங்க பெண்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்யக்கோரி தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று கடிதம் கொடுத்தார். கடிதத்தில் கூறியுள்ளதாவது:  திண்டுக்கல்லில் சுரபி நர்சிங் கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் பாலியல் புகாரில் கைதானார். ஆனால் ஒரு வாரத்திற்குள்ளாகவே பிணையில் விடுவிக்கப்பட்டார். இதை கண்டித்து, முன்னாள் எம்.எல்.ஏ கே.பாலபாரதி தலைமையில் ஜனநாயக மாதர் சங்க பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பாஜ திண்டுக்கல் வழக்கறிஞர் பிரிவு தலைவர் தெய்வேந்திரன் நடக்காததை ஜோடித்து பொய்யான புகார் அளித்ததால் மாதர் சங்க பெண்கள் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜோதிமுருகன் சம்பந்தப்பட்ட போக்சோ வழக்கை சிபிசிஐடி பிரிவிற்கு மாற்ற வேண்டும். பாலபாரதி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை உடன் ரத்து செய்ய வேண்டும். மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்ய தாடிக்கொம்பு காவல்நிலையத்திற்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: