முல்லை பெரியாறு அணை விவகாரம்; சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி கேரளா அரசு செயல்படுகிறது: தமிழக அரசு மனு தாக்கல்

புதுடெல்லி: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி கேரளா அரசு செயல்படுகிறது என்று தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை தொடர்பான பிரதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் அணையின் குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும், அதன் இயக்கத்தை முழுமையாக நிறுத்தி புதிய அணை கட்ட வேண்டும் என கேரளாவை சேர்ந்த பெரியாறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குமணன், உமாபதி ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர். அதில், “அணையின் இயக்கத்தை முழுமையாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை எவ்வித பரிசீலனையின்றி நிராகரிக்க வேண்டும். ஏனெனில் அணை அனைத்து விதத்திலும் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. அதே போன்று அணையின் இயக்கத்தை முழுமையாக கேரளாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. அது, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது.

புதிய அணை கட்ட வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அணையில் நீர் தேக்குவது என்பது ஒன்றிய நீர்வள ஆணையத்தின் அணை இயக்கமுறை விதிகளின்படியே கடைபிடிக்கப்படுகிறது. மேலும் முல்லை பெரியாறு அணையில் பாசன வசதி பெறும் வேளாண் நிலங்களின் தரவுகள் விவரங்கள் ஏற்கனவே பாதுகாப்பு மற்றும் அதன் அதிகார குழுவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அணை இயக்க விதிமுறைகளை தமிழ்நாடு என்றுமே மீறியதில்லை. மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு பொய்யானது.

அது நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் செயல். இதில் 1886ல் போடப்பட்ட முல்லை பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே நிராகரிக்கபட்ட விவகாரம் என்பதால், அதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள கூடாது. மேலும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள அனைத்து உத்தரவையும் கேரளா அரசு மீறி செயல்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: