விராலிமலை ஊராட்சியில் குப்பைகளை பிரித்தெடுப்பது குறித்து துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சி

விராலிமலை : விராலிமலை ஊராட்சியில் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பல்வேறு பணி நிமித்தமாக தினமும் விராலிமலைக்கு வந்து செல்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கில் சிறிய, பெரிய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் நுகர்வோர்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் குப்பைகள் ஒரு நாளைக்கு டன் கணக்கில் சேர்ந்து வருகின்றன.

இவ்வாறாக சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பைகளாக பிரிப்பதற்காக விராலிமலை-மதுரை நான்கு வழி சாலை அருகே தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் நுண்ணுயிர் உரகிடங்கு (மைக்ரோ கம்போஸ்ட் சென்டர்) 20 லட்சத்தி 81 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கிடங்கின் நோக்கம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனியாக பிரித்து அக்குப்பைகளை உரமாக்குவது.

இந்த நிலையில் இப்பணியில் ஈடுபடுவதற்காக ஊராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி விராலிமலை ஊராட்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்(கிஊ), ரவிச்சந்திரன் தலைமை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துணைத் தலைவர் தீபன் சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற ஒன்றிய பொறியாளர் அறிவழகன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராஜசேகர் உள்ளிட்டோர் குப்பைகளை எவ்வாறு தரம் பிரிப்பது அதை எவ்வாறு கம்போஸ்ட் முறையில் உரம் ஆக்குவது குறித்து துப்புரவு பணியாளர்களுக்கு விளக்கம் அளித்தனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் சோமேஸ்கந்தர், அலுவலக பணியாளர்கள் சரஸ்வதி, சாந்தி, திருப்பதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Related Stories: