குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் தொழில் நிறுவனங்களுக்கு இடைக்கால கடன் உதவி: 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு  மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன் முன்னிலையில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்,  தமிழ்நாடு சிட்கோ மற்றும் தாய்கோ வங்கியுடன் 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்தது. அப்போது தமிழ்நாடு தொழில்  முதலீட்டுக் கழகத்தின் தலைவர் ஹன்ஸ் ராஜ்  வர்மா, தொழில்துறை செயலாளர் கிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  துறை செயலாளர் அருண் ராய், தொழில் வணிக இயக்குநர் சிஜி தாமஸ் வைத்தியன் மற்றும் மேலாண்மை இயக்குநர் குப்புராஜ், தாய்கோ வங்கி, கிருபாகரன், பொது மேலாளர் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும்   தமிழ்நாடு சிட்கோ பொது மேலாளர்  ஆர்.பேபி ஆகியோர்  உடனிருந்தனர்.

மாநிலத்தில் உள்ள குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் போதுமான நடைமுறை மூலதனத்துடன் செயல்படும் வகையில்,  தாய்கோ வங்கி மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் ஆகியவற்றின்  ஒருங்கிணைந்த ஆற்றலை பயன்படுத்தி, மாநிலத்தில் குறு, சிறு மற்றும், நடுத்தர நிறுவன சூழலினை  திறம்பட வளர்த்திடும் பொருட்டு, இந்த இரண்டு நிறுவனங்களும்  இணை கடன் நடவடிக்கைகளில் ஈடுபடும். இதனால் மாநிலத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கால கடனுக்கான நிதி உதவியுடன்,  எளிதாக நடைமுறை மூலதனத்தினையும்  வழங்கிட வழிவகை  செய்யப்படும்.பின்னர், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில், இந்த தாய்கோ வங்கி எந்த நோக்கத்திற்கு தொடங்கப்பட்டதோ அதை மாற்றி அந்த வங்கியில் உள்ள பணங்களை நகை கடன், வீட்டுமனை கடன்களுக்கு  மட்டும் வழங்கப்பட்டு வந்தது.

தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படாத நிலை இருந்தது. கிட்டத்தட்ட 75% நிதியை தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என்கிற முதல்வரின் உத்தரவுக்கு இணங்க, இன்று (நேற்று) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இன்று நிலம் மதிப்பு உயர்ந்து நிலங்கள் வாங்க முடியாத நிலை இருக்கிறது. இதனால் கடன் சுலபமானால் தொழில் செய்பவர்கள் எளிமையாக இடத்தை வாங்கி தொழில் தொடங்குவதற்கு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதால் தான் இரண்டு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. தொழிலுக்கு ஏற்றவாறு ₹30 கோடி வரை, உச்சவரம்பிற்கு கீழ் பணம் வழங்கப்படும். சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்கப்படும் கடனை பொறுத்தவரை கடன் பெறுவதற்கான விதிமுறைகளை எளிமையாக்கி இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: