குற்றங்களை தடுக்க சென்னையில் மீண்டும் சைக்கிள் ரோந்து: போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவு

சென்னை: சென்னையில் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும் மீண்டும் சைக்கிள் ரோந்துப் பணிகளை போலீஸ் கமிஷனர் அறிமுகம் செய்துள்ளார். தமிழகத்தில் முன்பு போலீசார் சைக்கிளில் ரோந்து சுற்றி வந்தனர். இதனால் உள்ளூர் மக்களுடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இதன் மூலம் குற்றவாளிகளை தெரிந்து கொள்ளவும், குற்றத்தைப் பற்றிய விழிப்புணர்வும், முன் கூட்டியே சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து அறிந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் முடிந்தது. ஆனால் திடீரென சைக்கிள் ரோந்துப் பணிகள் நிறுத்தப்பட்டன. சொகுசு வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு சைக்கிள் ரோந்து குறைந்தன.

போலீசாரும், காரில் இருந்து இறங்காமலேயே விசாரித்து விட்டுச் செல்லும் நிலை இருந்தது.  இந்நிலையில், சென்னையில் மீண்டும் சைக்கிள் ரோந்துப் பணியை ஆரம்பிக்கும்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் ஆகியோருக்கு கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து இணை கமிஷனர் ராஜேஸ்வரி, அம்பத்தூர் துணை கமிஷனர் மகேஷ் மேற்பார்வையில் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் பூந்தமல்லி, நசரத்பேட்டை ஆகிய இடங்களில் நேற்று முதல் சைக்கிள் ரோந்துப் பணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதேபோல, ஒவ்வொரு பகுதியிலும் படிப்படியாக ரோந்துப் பணிகள் அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: