இரண்டு ஆண்டுகள் ஆகியும் சென்னை ஐஐடி மாணவி தற்கொலை விசாரணையில் முன்னேற்றம் இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தந்தை முறையீடு

சென்னை: சென்னை ஐஐடி மாணவி தற்கொலை குறித்து விசாரணை நடத்தும் சிபிஐ விசாரணையில் 2 ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று அவரது தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முறையிட்டார்.சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் குறித்து விசாரணை விரைந்து நடத்த வலியுறுத்தி அவருடைய தந்தை லத்தீப் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் சந்தித்து மனு கொடுத்தார். பின்னர், தலைமை செயலக வளாகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:எனது மகள் தற்கொலை செய்து 2 வருடம், ஒரு மாதம் ஆகிவிட்டது. தற்கொலை செய்து கொண்டபோதே, எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினை வந்து பார்த்து முறையிட்டேன். இப்போது அவர் முதல்வரான பிறகு அவரை இன்று (நேற்று) நேரில் சந்தித்தேன். 2 வருடம் தாண்டியும், இதுவரை மகள் தற்கொலையில் யார் குற்றவாளி என்று எதுவும் தெரியவில்லை. சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. அந்த ரிப்போர்ட் எப்படி இருக்கும் என்றும் தெரியாது. எனது மகள் சாவில் உள்ள மர்மம் குறித்த தகவலை விரைந்து அறிவிக்க வேண்டும் என்றார்.

பின்னர் அவரது வழக்கறிஞர் முகமதுஷா கூறும்போது, “சிபிஐ விசாரணை 2019 டிசம்பர் முதல் வருகிறது. இதுவரை எந்த குற்றவாளிகளையும் அவர்கள் கைது செய்யவில்லை. விரைவில் விசாரணை நடத்தி மாணவி பாத்திமா மர்ம மரணம் குறித்த உண்மை தகவல்களை அறிவிக்க வேண்டும்” என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம் என்றார்.இதை தொடர்ந்து, மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா கூறும்போது, “ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் வழக்கு மத்திய புலனாய்வு துறைக்கு அதாவது சிபிஐக்கு மாற்றப்பட்டது. 2 ஆண்டுகள் சென்ற பிறகும் கூட சிபிஐ இந்த வழக்கை மிகவும் மெதுவாக ஆமை வேகத்தில் நடத்தி கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் லத்தீப்பையும், கொல்லம் முன்னாள் மேயர், வழக்கறிஞர் முகமதுஷாவையும் விசாரித்து இருக்கிறார்கள். இந்த விசாரணை எந்த அடிப்படையில் செல்கிறது என்பது மர்மமாக இருக்கிறது. பாத்திமாவின் தந்தை லத்திப், முதலமைச்சரிடம், எனது மகளின் மரணத்தில் எங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இந்த விசாரணை சரியான முறையில் செல்ல வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார். முதலமைச்சரும் இதுகுறித்து தீர விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்’’ என்றார்.

Related Stories: