பஸ் படிக்கட்டில் தொங்கிச் சென்றால் டிரைவர், கண்டக்டர் மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கை

சென்னை: பஸ்களில் தொங்கிச் சென்றால் டிரைவர், நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், வழக்கம்போல பஸ்களில், ரயில்களில் ஆபத்தை உணராமல் தொங்கியபடி செல்வது, படிக்கட்டு, ஜன்னலில் உள்ள கம்பியைப் பிடித்து தொங்கியபடி செல்வது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபடுகின்றனர். இதனால் பல இடங்களில் மாணவர்கள், பெற்றோர், பள்ளி ஆசிரியர்களை அழைத்து போலீசார் எச்சரிக்கையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில், பஸ்களில் மாணவர்களை முறையாக ஏற்றிச் செல்வது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள், அனைத்து போக்குவரத்துக்கழக துணை மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:அரசு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் படிக்கட்டுகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பயணம் செய்வதால் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது. ஓட்டுநர், நடத்துநர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்களிலும் நிறுத்தி மாணவர்கள், பயணிகளை ஏற்றி பேருந்திக்குள் செல்ல போதிய இட வசதி ஏற்படுத்திக் கொடுத்து படிக்கட்டில் நின்று பயணம் செய்யாதவாறு பணிபுரிய வேண்டும்.

பேருந்து நிறுத்தங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பான முறையில் ஏறி இறங்குவதை உறுதி செய்த பின்னே பேருந்தை இயக்க அறிவுறுத்தப்படுகிறது.எனவே அனைத்து வணிகம், இயக்கம், கோட்ட மேலாளர்கள், கிளை மேலாளர்கள் மற்றும் பேருந்து நிலைய பொறுப்பாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிளைகள் மற்றும் பேருந்து நிலையங்களில் அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களும் அறியும் வண்ணம் மேற்கண்ட தகவல்களை அறிவிப்பு பலகை வாயிலாக தெரியப்படுத்தி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பேருந்தில் பயணம் செய்யும் போது பயணம் பாதுகாப்பாக இருக்குமாறு ஓட்டுநர், நடத்துனர்கள் நடந்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும்.

தணிக்கையாளர்கள் வழித்தடங்களில் ஆய்வு மேற்கொள்ளும் போது படிக்கட்டு பயணத்தை முற்றிலும் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்து புகார்கள், சம்பவங்கள் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இதுபோல, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் பஸ்கள், ரயில்களில் பயணிக்கும்போது தொங்கிக்கொண்டு சென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More