61.70 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் நவீன வசதிகளுடன் சீரமைப்பு: ஆணையர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்புகள் 61.70 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் சீரமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:சட்டமன்ற பேரவையில் 2021-22ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கை விவாதத்தின்போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி பள்ளிகள் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில், 8 மாநகராட்சி பள்ளிகளில் 21.77 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளுக்கு ஒப்பம் கோரப்பட்டுள்ளது.  ஏற்கனவே, 6 பள்ளிகளில் 17.38 கோடி மதிப்பில் புதிய வகுப்பறைகள் உட்பட கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 12 மாநகராட்சி பள்ளிகளில் 22.55 கோடி மதிப்பில் வகுப்பறைகள் உட்பட  கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கான திட்ட மதிப்பீடு முடிவுற்றவுடன் நிர்வாக அனுமதி பெறப்பட்டு விரைவில் ஒப்பந்தம் கோரப்படும்.    சென்னை மாநகராட்சி பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் திட்டப்பணிகள் சிஐடிஐஐஎஸ் மற்றும் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பணிகள் மூலம், மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன், அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வித் திறன் ஆகியவை மேம்பட்டு அவர்களின் எதிர்காலம் வளமானதாக அமையும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More