முடிவெட்டியதற்கு பணம் கேட்டதால் சலூன் கடைக்காரருக்கு கத்திரிக்கோல் குத்து: போதை ஆசாமி கைது

சென்னை: சென்னை திரு.வி.க.நகர் வாசுதேவன் முதல் தெருவை சேர்ந்தவர் ரவி (25). அதே பகுதி தீட்டித்தோட்டம் 1வது தெருவில் சலூன் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை இவரது கடைக்கு வந்த நபர், முடி வெட்டிக்கொண்டார். ஆனால், அதற்கு பணம் கொடுக்காமல் புறப்பட முயன்றுள்ளார். இதனால், ரவி அவரை தடுத்து நிறுத்தி, பணம் தரும்படி கேட்டுள்ளார். அப்போது அவர், ‘நான் யார் தெரியுமா... என்னிடமே பணம் கேட்கிறாயா...’ என மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால், இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த நபர், கடையில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து ரவியை குத்தியுள்ளார். இதில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த ரவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெரியார் நகர் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், திரு.வி.க.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரவியை கத்திரிக்கோலால் குத்திய பெரம்பூர் கண்ணபிரான் கோயில் தெருவை சேர்ந்த தர் (எ) கபாலியை (22) கைது செய்தனர். இவர், மதுபோதையில் சலூன் கடை உரிமையாளர் ரவியை கத்திரிக்கோலால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட கபாலியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More