போலீஸ் விசாரணைக்கு வந்த 2 பேர் மரணம் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிதி உதவி வழங்க வேண்டும்: ஓபிஎஸ், இபிஎஸ் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் கடந்த 4ம் தேதி வாகன சோதனையில் நீர்க்கோழினேந்தல் கிராமத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் சஞ்சயை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். மாலையில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட மணிகண்டன் இரவில் தூங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்ததாக செய்திகள் வந்துள்ளன.இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம் சு.பில்ராம்பட்டு கிராமத்தை சேர்ந்த உலகநாதன் என்கிற விவசாயி, அவரது மனைவியை நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை அருகே சுண்டல், போண்டா விற்றபோது, அரகண்டநல்லூர் காவல் துறையினர் தடுத்துள்ளனர். அப்போது, உலகநாதன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு மணிகண்டன் மற்றும் உலகநாதன் இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு அரசு உதவி மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க ஆவன செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, “கல்லூரி மாணவர் மணிகண்டன், வியாபாரி உலகநாதன் ஆகியோரின் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும்” என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: