பீகார் மாநிலத்தில் நடந்த கூத்து; தடுப்பூசி பெயர் பட்டியலில் மோடி, பிரியங்கா சோப்ரா: 2 கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் சஸ்பெண்ட்

பாட்னா: பீகாரில் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் பெயர் பட்டியலில் மோடி, பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பிரபலங்களின் பெயர் இருப்பதால், சம்பந்தப்பட்ட கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பீகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டவர்களின் விபரங்கள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்யப்பட்டது. அதில், தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் பெயர் பட்டியலில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா,  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நடிகர் அக்‌ஷய் குமார், நடிகை பிரியங்கா சோப்ரா (வெளிநாட்டில் உள்ளார்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

விசாரணையில், தடுப்பூசி போட்டுக் கொண்டோரின் தினசரி விபரத்தை ‘கோவின்’ போர்ட்டலில் பதிவேற்றம் செய்யும் இரண்டு கணினி ஆப்ரேட்டர்கள், மேற்கண்ட பிரபலங்களின் பெயர்களை வேண்டுமென்றே பதிவேற்றம் செய்தது தெரியவந்தது. அதையடுத்து அவர்கள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரியதர்ஷினி கூறுகையில், ‘கொரோனா பரிசோதனை, தடமறிதல், தடுப்பூசி போடுதல் போன்ற பணிகளில் தீவிரமாக மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற புகார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மையத்தில் இந்த புகார்கள் வந்துள்ளதால், மற்ற சுகாதார மைய பதிவுகளையும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பீகார் சுகாதார அமைச்சர் மங்கள் பாண்டே, என்னிடமும், தலைமை மருத்துவ அதிகாரியிடம் இவ்விவகாரம் குறித்து பேசினார். மற்ற மருத்துவமனைகளின் தரவையும் ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்’ என்றார். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, பீகாரில் 8,63,12,902 டோஸ் தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 5,53,77,427 பேருக்கும், இரண்டு டோசும் 3,09,35,475 பேருக்குபோடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: