நிலக்கடலை சாகுபடி செய்வதற்கு முன் விதை பரிசோதனை செய்ய வேண்டும்: உதவி இயக்குனர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட விதைச் சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நா.ஜீவராணி அறிக்கை; கார்த்திகை பட்டத்துக்குள் நிலக்கடலை விதைக்கும்போது போதிய மழை, சரியான தட்பவெப்பநிலை இருப்பதால் அதிக மகசூலுக்கு வாய்ப்புள்ளது. நன்கு திரட்சியான இன தூய்மை மற்றும் நடுத்தர பருமன் உள்ள விதைகளில் 96 சதவீதம் புறத்தூய்மை கட்டாயம் இருக்க வேண்டும். மண் மற்றும் விதைகள் வழியாக பரவும் நோய்களால் நிலக்கடலை இளஞ்செடிகள் பாதிக்கப்பட்டு, பயிர் எண்ணிக்கை குறைந்து விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க ஒரு கிலோ நிலக்கடலை விதைக்கு 4 கிராம் உயிர் நோய்க் கொல்லியான டிரைக்கோடெர்மா விரிடி 10 கிராம் சூடோமோனஸ் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். விதைப்பதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக விதை நேர்த்தி செய்தால் 30 நாட்களுக்கு பயிருக்கு பாதுகாப்பு கிடைக்கிறது.

எக்டேருக்கு தேவையான 125 கிலோ முதல் 160 கிலோ விதை பருப்புடன் 600 கிராம் ரைசோபியம் கலந்து விதைப்பதன் மூலம் நைட்ரஜனை பயிர்கள் நிலைப்படுத்தி தழைச்சத்து தேவையை குறைக்கிறது. 600 கிராம் பாஸ்போ பாக்டீரியாவை எக்டேருக்கு தேவையான விதைப்பருப்புடன் கலந்து விதைத்தால் பயிருக்கு தேவையான மணிச்சத்து அளவு குறைகிறது. விதை நேர்த்தி செய்யும் போது, விதைகள் உயிர் உரத்துடன் எளிதில் ஒட்டும் வகையில் அரிசி கஞ்சியில் சேர்த்து நிழலில் உலர்த்திய பின் விதைக்க வேண்டும். சாகுபடி செய்வதற்கு முன் விதைப்பரிசோதனை செய்வது நல்லது. விதைக்காக உள்ள நிலக்கடலை காய்களில் 500 கிராம் எடுத்து மாவட்ட விதைப் பரிசோதனை மையத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: