பள்ளிகளில் இறைவணக்கம் தொடர அனுமதி: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: ஒமிக்ரான் வைரஸ் விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது. அதே சமயம் பள்ளிகளில் நடைபெறும் இறைவணக்கக் கூட்டம், கூட்ட நெரிசல் காரணத்தால் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் அதற்காக வகுப்பறையில் தனி மனித இடைவெளியில் இறைவணக்கம் நடைபெற உத்தரவிட வேண்டும். மாணவ, மாணவிகள் முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் இறைவணக்கத்தில் பங்கேற்பது பாதுகாப்பாக இருப்பதோடு நல்லொழுக்க நெறிமுறைகளை பின்பற்றுவதற்கும் வழிவகுக்கும்.

இறைவணக்கத்திற்காக மாணவர்கள் உரிய நேரத்தில் பள்ளிக்கு வருவதும், தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, நீதிநெறி கதைகள் சொல்வதும் வழக்கமானது மட்டுமல்ல மாணவர்கள் நலன் காக்கும். எனவே தமிழக அரசு, கொரோனா வைரஸ் பரவல் தடுப்புக்கு அதிக அக்கறையோடு செயல்பட்டு, பள்ளிகளில் வகுப்பறையிலோ அல்லது வழக்கமான நடைமுறையிலோ  முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் இறைவணக்க நடைமுறை தொடர அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

More