தடுப்பூசி செலுத்தாமல் சான்றிதழா? மாவட்டந்தோறும் கண்காணிப்பு அதிகாரிகள்: முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை

சென்னை: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் செலுத்திக் கொண்டதாக சான்றிதழ் பெற்றால் அதுகுறித்து புகார் அளிக்கும் வகையில் மாவட்டந்தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.இது குறித்து அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பிய சுற்றறிக்கையில்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகள் விரைந்து சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சிலர் அதனைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது தங்களுடைய ஆதார் எண்ணை மட்டும் பகிர்ந்து விட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாது தடுப்பூசி செலுத்தியதைப் போன்று சான்றிதழ் பெறுவதாகத் தெரிகிறது. இதில் சில களப்பணியாளர்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய நடவடிக்கைகளை மாவட்ட துணை சுகாதார இயக்குநர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். இதுபோன்ற செயல்களில் களப் பணியாளர்கள் ஈடுடாமல் இருப்பதையும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டுமே சான்றிதழ் வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும். மேலும் முறைகேடாக சான்றிதழ் வழங்கும் நோக்கில் களப்பணியாளர்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான புகார்களைக் கண்காணிப்பதற்காக மாவட்டந்தோறும், சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதாரத் துறை உதவி இயக்குநர்கள் அல்லது புள்ளியியல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பொது சுகாதாரத்துறை இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: