தமிழ்நாடு வணிகர் நலவாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினர் சேர்க்க கால அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் கட்டணமின்றி நிரந்தர உறுப்பினர் சேர்ப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வணிகர் நல வாரியம் வணிகர் பெருமக்களின் நலனுக்காக இந்தியாவிலேயே முதன் முதலாக 1989ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வணிகர் நல வாரியத்தின் உறுப்பினர்களின் நலனுக்காக குடும்ப நல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி, உறுப்பினரின் வாரிசுகளுக்கு விளையாட்டு நிதி உதவி, தீ விபத்து உதவி, நலிவுற்றோருக்கான நிதி உதவி, விபத்து கால உதவி, திருமண உதவி போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களின் வாயிலாக 1989ம் ஆண்டு முதல் இதுவரை 3,05,73,000 மதிப்பீட்டில் 8,873  உறுப்பினர்கள் பயனடைந்துள்ளனர்.

இந்த அரசு பொறுப்பேற்ற பின் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தில் பதிவு பெற்ற வணிகர்கள் மற்றும் பதிவு பெறாத வணிகர்களில் வருடத்திற்கு 40,00,000 வரையிலான வியாபாரம் செய்யும் வணிகர்கள், வாரியத்தின் பலனைப் பெறும் வகையில் உறுப்பினர் ஆவதற்கான கட்டணத் தொகையான 500ஐ செலுத்துவதிலிருந்து ஜூலை 15ம் தேதி முதல் மூன்று மாதங்களுக்கு விலக்களிக்கப்பட்டது.   இதன் பயனாக ஜூலை 15ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை 40,442 (இணை ஆணையர் அலுவலகங்கள் மூலமாக 31,898 மற்றும் நேரடி இணைய வழியாக 8,544) வணிகர்கள் தங்களை வாரியத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொள்ள விண்ணப்பித்துள்ளனர். பல்வேறு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்புகளின் கோரிக்கையை ஏற்று வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர் ஆவதற்கான கட்டணத் தொகையான 500ஐ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கும் கால அவகாசத்தை 2022 மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: