குளத்தை மூடி விவசாயம் ரூ.1 கோடி அரசு நிலம் மீட்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே சீயட்டி காரை கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான நீர்நிலை புறம்போக்கு நிலத்தை மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் மீட்டனர். நீர்நிலைகள் ஆக்கிரமிப்பால், மழை காலங்களில், பெரும் சேதம் ஏற்படுகிறது. பொதுமக்கள் பாதிப்படைவதுடன், உடமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்படுகிறது.இதைதொடர்ந்து, தமிழகத்தில், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், அதிகாரிகள் அனைத்து நீர் நிலைகளையும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்தவேளையில், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம் சீயட்டி காரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சர்வே எண் 106/1 ல் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் குளம் புறம்போக்கு இடம் உள்ளது. இந்த குளத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த தனிநபர் ஆக்கிரமித்து, குளத்தை மூடி விவசாய நிலமாக பயிர் செய்வது தெரிந்தது. இதையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் வருவாய் துறையினர், நேற்று மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, குளம் ஆக்கிரமிக்கப்பட்டது உறுதியானது. இதையடுத்து, 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம், சமன் செய்யப்பட்டு நிலமாக இருந்த பகுதியை மீண்டும் குளமாக மாற்றும் பணியைத் தொடங்கினர்.

அப்போது, அப்பகுதியை சேர்ந்த ஒருவர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டத்தில் விஏஓவாக வேலை செய்வது தெரிந்தது. அரசு ஊழியராக வேலை பார்ப்பவர், வருவாய்த்துறை அலுவலர் களை அவதூறாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு பணிகளை, காஞ்சிபுரம் ஆர்டிஓ ராஜலட்சுமி, தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: