விடையூர், கொண்டஞ்சேரி கிராமத்தில் பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும்: பாமக தீர்மானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றிய பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் புதியதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் கடம்பத்தூரில் ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் கேசவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் வாசுதேவன், செஞ்சிகுமார் வரவேற்று பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் கேசவன், ஊராட்சி தலைவர் ஏழுமலை, சீனிவாசன், சுகுமார், பாபு முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் புதியதாக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட கவுன்சிலர் இ.தினேஷ்குமார் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதில் மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார் பேசுகையில், ‘’பாமக நிறுவனர் ராமதாசின் அறிவுரையின்படி அனைத்து கிளைக் கழக நிர்வாகிகளும் சிறப்பாக செயல்பட்டு கட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பாமக வளர்ச்சிக்காக குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி தீவிரமாக பாடுபடும் இளைஞர்களுக்கு கட்டாயம் கட்சி பதவி வழங்கப்படும். இதனால் நகரம், கிளைகளில் நிர்வாகிகள், தொண்டர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்றார்.

இதையடுத்து கூட்டத்தில், ‘’வட கிழக்கு பருவமழையால் கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விடையூர் மேம்பாலம் சேதம் அடைந்துள்ளது. அவற்றை சீரமைத்தால்தான் 20 கிராம மக்கள் பயன்பெற முடியும். கொண்டஞ்சேரியில் சேதம் அடைந்த தரைப்பாலத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும்’’ என தீர்மானம் நிறைவேற்றினர்.

Related Stories:

More