கேத்தி பேரூராட்சி பகுதியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை-செயல் அலுவலர் தகவல்

மஞ்சூர் :  கேத்தி பேரூராட்சியில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செயல் அலுவலர் நடராஜ் தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கேத்தி சமுதாயகூடம், சாந்தூர், கேத்தொரை, பழைய அருவங்காடு, உல்லாடா ஆகிய 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டன. இந்த முகாம்கள் மூலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்கள், வியாபாரிகள் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு முதல் மற்றும் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

முகாமை மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாலமன், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, செயல் அலுவலர் நடராஜ் தலைமையில் பேரூராட்சிக்குட்பட்ட எல்லநள்ளி உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், கொரோனா விதிகளை மீறி பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அதிரடியாக அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியில் ஒமிக்ரான் வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன் கட்டாய முக கவசம் அணிவது, சமுதாய இடைவெளியை கடைபிடிப்பது குறித்து துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இது குறித்து செயல் அலுவலர் நடராஜ் கூறியதாவது:

கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகீம்ஷா மேற்பார்வையில் கேத்தி பேரூராட்சி சார்பில் வாரந்தோறும் கொரோனா தடுப்பூசி மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம், பேரூராட்சிகுட்பட்ட பகுதிகளில் சுமார் 90 சதவீதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

விரைவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது கொரோனா பாதிப்பு அடியோடு குறைந்துள்ளது.

இருந்த போதிலும் பேரூராட்சிகுட்பட்ட அனைத்து கிராமங்களிலும் தொடர்ந்து சுகாதாரபணிகள் தினமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: