பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக 10ம் தேதி வாகனங்களை 10 நிமிடம் நிறுத்துவோம்: சிஐடியு வேண்டுகோள்

சென்னை: தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக, வரும் 10ம்தேதி 12 மணிக்கு 10 நிமிடம் வாகனங்களை நிறுத்தி எதிர்ப்பை தெரிவிக்க அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில சம்மேளன கூட்டம் செங்கல்பட்டில் நேற்று, சம்மேளனத்தின் தலைவரும் சிஐடியு  மாநிலத் தலைவருமான அ.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், துணைத் தலைவர்கள் எம்.சந்திரன், அன்பழகன், பொருளாளர் சசிக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அ.சவுந்தரராஜன் அளித்த பேட்டி: தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. தேர்தல் வருவதால், ஒன்றிய அரசு தற்போது ஐந்து ரூபாய் குறைத்துள்ளது. 37 ரூபாயை உயர்த்திவிட்டு ஐந்து ரூபாய் குறைத்துள்ளனர். 55 ரூபாய்க்கு டீசலும், 65 ரூபாய்க்கு பெட்ரோலும் வழங்க முடியும். வரிகள் உள்ளிட்ட அனைத்தும் இதில் அடங்கும். மக்களிடம் கொள்ளை அடிக்கும் அரசாக ஒன்றிய அரசு உள்ளது. போக்குவரத்து சங்கங்கள், உள்ளிட்ட பல்வேறு வெகுஜன அமைப்புகள் இணைந்து உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வருகின்ற டிசம்பர் 10தேதி போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றோம்.

டிசம்பர் 10ம் தேதியன்று இயங்கிக் கொண்டிருக்கும் வாகனங்களை 12 மணியிலிருந்து 10 நிமிடம் நிறுத்துங்கள் என பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வாகன ஓட்டிகள் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக வாகனங்களை 10 நிமிடம் நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி மிக மோசமான பாதிப்புகளைத் தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்தும் தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. வருகின்ற பிப்ரவரி மாதம் அகில இந்திய வேலை நிறுத்தம் நடத்திட தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு வருகின்றது என்றார்.

Related Stories:

More