மாதவரத்தில் திரிந்த ஆந்திர சிறுமி மீட்பு: ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு

திருவொற்றியூர்: புழல் சின்னசாமி தெருவை சேர்ந்தவர் சிவா. ஆட்டோ டிரைவரான இவர், நேற்று முன்தினம் மாலை மாதவரம் மேம்பாலம் அருகே சவாரிக்காக காத்திருந்தார். அப்போது அங்கு சுற்றித் திரிந்த ஒரு சிறுமியை அழைத்து சிவா விசாரித்துள்ளார். அதற்கு அந்த சிறுமி, ‘ஆந்திர மாநிலத்தை சேர்ந்த நான், 9ம் வகுப்பு படித்து வருகிறேன். பெற்றோர் திட்டியதால் கோபித்துக்கொண்டு ஆந்திராவில் இருந்து பஸ் ஏறி இங்கு வந்துவிட்டேன். எங்கு போவது என்று தெரியாமல் இருக்கிறேன்’ என்று கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுமியை தனது ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர், இன்ஸ்பெக்டர் காளிராஜ் சிறுமியிடம் பெற்றோர் செல்போன் எண்ணை வாங்கி, தகவல் தெரிவித்தார். அதன்பேரில், உடனடியாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்களிடம், சிறுமியை அனுப்பி வைத்தனர். சரியான நேரத்தில் சிறுமியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சிவாவுக்கு போலீசாரும், சிறுமியின் பெற்றோரும் நன்றி தெரிவித்தனர்.

Related Stories:

More