விபத்தில் சிக்கிய மாணவனின் உயிரைக் காப்பாற்றிய செவிலியர்! பாராட்டிய பொதுமக்கள்

மன்னார்குடி: மன்னார்குடிஅருகே சாலை விபத்தில் காயமடைந்து மூச்சு, பேச்சு இன்றி மயங்கிய கல்லூரி மாணவன் வசந்த்தை அவ்வழியாக சென்ற அரசு மருத்துவமனை செவிலியர் வனஜா, உடனடியாக CPR சிகிச்சை செய்து இதய துடிப்பை மீட்டு உயிரை காப்பாற்றினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த கோட்டூர்தோட்டத்தை சேர்ந்த செவிலியர் வனஜா. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று அவர் மதுக்கூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு தனது குடும்பத்தினருடன் காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். செவிலியர் வனஜா வந்த கார் மன்னார்குடி அருகே  6-நம்பர் வாய்க்கால் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது இவரது காருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் மாணவர் வசந்த் சென்று கொண்டிருந்தார். அப்போது  மாணவர் வசந்த் சென்ற இருசக்கர வாகனத்தின் குறுக்கே ஆடு ஒன்று வந்ததால் ஆட்டின் மீது இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்ததில் வசந்த் பலத்த காயமடைந்தார்.

இதை பார்த்த செவிலியர் வனஜா உடனடியாக காரை நிறுத்தி அருகில் சென்று வசந்த்தை பரிசோதனை செய்தார். அப்போது அவர் நாடித் துடிப்பு நின்று ஆபத்தான நிலையில் இருந்தது தெரிந்தது. உடனடியாக  செவிலியர் வனஜா சி.பி.ஆர் என சொல்லப்படக்கூடிய இதயத்துடிப்பை மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரும் மார்பின் மீது அழுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார்.

இதனால் மீண்டும் அந்த இளைஞரின் இதயத்துடிப்பு பழைய நிலைமைக்கு திரும்பி நாடித்துடிப்பும் சீரானது. இளைஞருக்கும் சுயநினைவு திரும்பியது. இதற்கிடையில் வனஜாவின் கணவர் ஆனந்தன் 108 ஆம்புலன்ஸக்கு தகவல் தெரிவித்து ஆம்புலன்சும் வந்து சேர்ந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் வசந்த்  மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

வசந்த் மன்னார்குடி அடுத்த கருவாகுறிச்சியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் என்பதும் அவர் மல்லிப்பட்டிணம அடுத்த மனோராவில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. பின்னர் கல்லூரி மாணவர் வசந்த் மேல் சிசிக்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

வசந்த் ஆபத்து நிலையிலிருந்து மீண்டது குறித்து அறிந்த பின்னரே செவிலியர் வனஜா மருத்துவமனையில் இருந்து வீட்டிற்க்கு கிளம்பி சென்றுள்ளார். விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இருந்த இளைஞருக்கு சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய மன்னார்குடி  அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை செவிலியர் வனஜாவின் செயலை பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்.

Related Stories:

More