அதிமுக நிர்வாகிகள் தேர்தல் நடத்த தடை இல்லை: விதிமீறல் நடந்தது தெரிந்தால் முடிவு ரத்து

சென்னை: அதிமுக நிர்வாகிகள் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், விதிமீறல் தெரிந்தால் தேர்தல் முடிவை ரத்து செய்யப்படலாம் என்று கூறி, இந்த வழக்கில் ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் 3 வாரத்தில் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்எல்ஏ மற்றும் முன்னாள் எம்பியான கே.சி.பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

 அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய காலத்திலிருந்தே கட்சியின் அடிப்படை உறுப்பினராக செயல்பட்டு வந்துள்ளேன். காங்கேயம் தொகுதி எம்எல்ஏவாகவும், திருச்செங்கோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளேன். கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு கட்சி விதிகளுக்கு எதிராக கட்சியின் விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கட்சி விதியில் பொதுச்செயலாளர் பதவியை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் தரப்பட்டு தன்னிச்சையாக விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் கடந்த 2017 செப்டம்பர் 12ம் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 அதுமட்டுமல்லாமல் எந்த காரணத்தையும் கூறாமல் என்னை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம் செய்து ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் உத்தரவிட்டனர். இதையடுத்து, பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட கட்சியின் விதி திருத்தத்தை எதிர்த்து தேர்தல் ஆணையத்தில் கடந்த 2018 ஏப்ரல் 15ல் முறையிட்டேன். ஆனால், எனது மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதையடுத்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் எனது மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது. என்னை நீக்கம் செய்ததை எதிர்த்த வழக்கும், கட்சியின் விதியை திருத்தம் செய்ததை எதிர்த்த வழக்கும் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் உள்ளது.

 இந்த நிலையில் டிசம்பர் 7ம் தேதி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக, டிசம்பர் 2ம் தேதி கட்சியின் தேர்தல் ஆணையர்களாக பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ெஜயராமன் ஆகியோரை நியமித்து கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். கட்சி அடிப்படை உறுப்பினர்களுக்கு தெரியும் வகையில் 21 நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அந்த விதியையும் மீறி இந்த தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அடிப்படை உறுப்பினர்கள் சேர்க்கையிலும் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. ஆயிரக்கணக்கானோருக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்படவில்லை.

வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படவில்லை.  எனவே, டிசம்பர் 2ம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் 21 நாட்களுக்கு முன்பு தேர்தல்  அறிவிப்பை வெளியிடுமாறு உத்தரவிட வேண்டும். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு அவசர வழக்காக நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி,  2018ல் நீக்கப்பட்ட மனுதாரர் கட்சி தேர்தலை எதிர்த்து எப்படி வழக்கு தொடரமுடியும் என்று கேட்டார்.  

மனுதாரர் கே.சி.பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர் தியாகேஸ்வரன் ஆஜராகி, மனுதாரரை கட்சியிலிருந்து நீக்கிய பிறகுதான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டனர். மனுதாரரை நீக்கம் செய்தது செல்லாது என்பதால் வழக்கு தொடர முடியும். விதிகளை மீறி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரரைப்போல் 27,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த வழக்கில் இணைய தயாராக உள்ளனர் என்று வாதிட்டார். அப்போது, விருப்ப மனு வழங்கப்படாமல் வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்  ஓமப்பொடி பிரசாத் சிங் ஆஜராகி, விதிகளை பின்பற்றாமல் 5 நாட்களில் தேர்தல் நடைமுறையை முடிக்க முயற்சி நடப்பதாகவும், விருப்பமனு வாங்க சென்றபோது வெளியில் துரத்தப்பட்டதாகவும் தன்னை கட்சி தலைமையகத்தில் தாக்கினர் என்றும் தெரிவித்தார்.

இதை கேட்ட நீதிபதி வழக்கு தொடராதவர்கள் வாதிட முடியாது. எதிர்தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்காமல் எப்படி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியும். எதிர் தரப்பு விளக்கம் அளித்த பிறகு வழக்கு முகாந்திரம் இருந்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றம் தயங்காது என்றார். அதிமுக, அதன் நிர்வாகிகள், தேர்தல் நடத்த நியமிக்கப்பட்டவர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், அரவிந்த் பாண்டியன், சதீஷ் பராசரன், வக்கீல்கள் சி.திருமாறன், ராஜலட்சுமி பிரகாஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அரவிந்த் பாண்டியன் வாதிடும்போது, மூன்றாண்டுகளாக கட்சியுடன் தொடர்பில்லாதவர் எப்படி வழக்கு தொடர முடியும். நீக்கத்தை எதிர்த்து சிவில் வழக்காக தொடர்ந்து அதில் வெற்றி பெற்ற பின்னர்தான் இந்த வழக்கை தொடரலாம் என்றார்.

 அதற்கு கே.சி.பழனிசாமி தரப்பு வக்கீல், தேர்தலை 5 நாளில் அதிமுக நடத்தும்போது, பதில் மனுவை 2 நாளில் தாக்கல் செய்ய முடியும். வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும். அதுவரை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பதிலளிக்க நீண்ட அவகாசம் வழங்கினால், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கண்காணிப்பில், காவல்துறை பாதுகாப்புடனும் தேர்தல் நடத்துமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரினார்.

 இதை ஏற்க மறுத்த நீதிபதி, வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பையும் கேட்காமல் இடைக்காலத்தடை விதிக்க முடியாது. மனுதாரர் விருப்பப்பட்டால் மனுவை  தள்ளுபடி செய்கிறேன். மேல்முறையீடு செய்து கொள்ளுங்கள். அதேசமயம் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து நிர்வாகிகள் தேர்வு வரை சட்ட விதிமீறல் இருப்பது தெரியவந்தால், தேர்தல் முடிவுகளை ரத்துசெய்ய முடியும்.

 இந்த வழக்கு குறித்து அதிமுக, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் அதிகாரிகள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: