விரைவு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் இருந்து 1.12.2021 முதல் கேரள மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து, கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து அய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த வருடமும் அவ்வாறே இயக்குவதற்கு 64 சிறப்புப் பேருந்துகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளது. அந்தவகையில், இந்த ஆண்டும் இன்று (3.12.2021) முதல் வரும் 16.1.2022 வரையில், சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவை பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்பட உள்ளன. பக்தர்களின் வருகைக்கு ஏற்ப, பேருந்துகள் இயக்கப்படும். மேலும், 30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in மற்றும் தனியார் இணையதளங்களின் மூலமாக முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 94450 14412, 94450 14450, 94450 14424, 94450 14463, மற்றும் 94450 14416 ஆகிய கைப்பேசி எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் இந்த சேவையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: