கொளத்தூர் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடுத்தாண்டு மாணவர்களின் எண்ணிக்கை 1000 ஆக உயரும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் புதிதாக 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதலாவதாக சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் எவர்வின் தனியார் பள்ளி கட்டிடத்தில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சைவ சித்தாந்த வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துவக்கி வைத்தார். 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் வயது வரம்பின்றி வகுப்பில் சேரலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்ப கட்டணமின்றி இலவச சான்றிதழ் படிப்பிற்காக பாடப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி கட்டணங்கள் அனைத்தையும் கல்லூரியே ஏற்றுக் கொள்ளும் எனவும், சைவ சித்தாந்த படிப்பில் சேர முதற்கட்டமாக 100 பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:  தமிழகத்தில் பல பணிகளுக்கு இடையூறு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. கொளத்தூரில் கல்லூரி அமைவதற்கு பல தொந்தரவுகள் வந்தபோதிலும் அவற்றை எல்லாம் தாண்டி கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு முழு காரணம் முதல்வர். எல்லா தடைகளையும் படிக்கற்களாக மாற்றிய பெருமை முதல்வரையே சேரும். நீதியரசர்கள் என்னென்ன வழிகாட்டு நெறிமுறைகளை கூறியுள்ளார்களோ, அதையெல்லாம் பின்பற்றி கல்லூரியை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம்.  அடுத்தாண்டு மாணவர்களின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இனிவரும் காலங்களில் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து வகையான உதவிகளை செய்வதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். சைவ சித்தாந்த சான்றிதழ் வகுப்புகளை மாணவ, மாணவிகள் முறையாக பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் வளம்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், வைணவ கல்லூரி முதல்வர் சந்தோஷ் பாபு, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் காவேரி, எவர்வின் குழும தலைவர் புருஷோத்தமன், சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறை தலைவர் சரவணன், கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சக்கரவர்த்தி மற்றும் சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், கொளத்தூர் பகுதி செயலாளர்கள் ஐசிஎப் முரளி, நாகராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: