தேர்தல் அறிவித்த தேதியில் அதிமுக அரசு வழங்கிய 116 சார்பதிவாளர்களின் பதவி உயர்வு ரத்து: பதிவுத்துறை ஐஜி சிவன்அருள் அதிரடி

சென்னை: சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட தேதியில் அதிமுக அரசு, பத்திரப்பதிவு துறையில் உதவியாளர்கள் 116 பேருக்கு சார்பதிவாளர்களாக பதவி உயர்வு  வழங்கியதை ரத்து செய்து, பதிவுத்துறை ஐஜி  சிவன் அருள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பத்திரப்பதிவுத்துறையில் 116 உதவியாளர்களுக்கு சார்பதிவாளர் இரண்டாம் நிலைக்கு பதவி உயர்வு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிப்ரவரி 26ம் தேதி அவசர அவசரமாக ஆணையிடப்பட்டது. இதுதொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 116 பேரை பதவி இறக்கம் செய்யலாமா, இல்லை வேறு ஏதேனும் நடைமுறையை பின்பற்றலாமா என்பது தொடர்பாக ஆலோசனை கேட்கப்பட்டன.

இந்நிலையில், விதிமுறைகளை மீறி பதவி உயர்வு வழங்கியதை ரத்து செய்து பதிவுத்துறை ஐஜி சிவன் அருள் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், அனைத்து டிஐஜிக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் வழங்கப்பட்ட ஆணைகளின் அடிப்படையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஆணைகள் ரத்து செய்து ஆணையிடப்படுகிறது. சார்பதிவாளர்களில் கடந்த பிப்ரவரி 25ம் தேதியில் இரண்டாம் நிலை சார்பதிவாளர்களாக பணியில் இருந்தவர்களில் தற்போது பணி நீக்கத்தில் உள்ளவர்கள் நீங்கலாக மற்றவர்கள் தற்போது, பணிபுரியும் இடத்திலேயே இரண்டாம் நிலை சார்பதிவாளராக பணிபுரிய ஆணையிடப்படுகிறது. கடந்த பிப்ரவரி 26ம் தேதி  பிறப்பிக்கப்பட்ட அந்த ஆணைகளில் இடம்பெற்றுள்ள சார்பதிவாளர்களுக்கு உதவியாளர் நிலையில் பணியிடம் வழங்குதல் குறித்து தனியே ஆணை பிறப்பிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

More