சோளிங்கர் அருகே மழையால் தனித்தீவான கிராமம் கயிறு கட்டி இடுப்பளவு வெள்ளத்தை கடந்து 4 பேரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்

சோளிங்கர்:  சோளிங்கர் அருகே தொடர் மழையால் கிராமம் தனித்தீவானது. இதனால் வீட்டில் சிக்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மற்றும்  10 ஆடுகளை தீணைப்பு துறையினர் கயிறு கட்டி இடுப்பளவு வெள்ளத்தை கடந்து சென்று மீட்டனர்.  ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு பலத்த மழை பெய்தது இதன் காரணமாக கொடைக்கல் பெருங்காஞ்சி தளவாய்பட்டரை, ரெண்டாடி, கரிக்கல், புலிவலம், நந்திமங்கலம், சோமசமுத்திரம், கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வயல் வெளிகளில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது.

இந்நிலையில், சோளிங்கரில் இருந்து நந்திமங்கலம் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் மூழ்கி ஆள் உயரத்திற்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அவ்வழியாக போக்குவரத்து தடை ஏற்பட்டது. இதேபோல் கட்டாரிகுப்பத்தில் இருந்து நந்தி மங்கலத்திற்கு செல்லும் வழியில் உள்ள ஓடை கால்வாய்களிலும், ராமாபுரத்திலிருந்து நந்திமங்கலம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்திலும்  அதிகளவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிராமத்தை சுற்றியுள்ள அனைத்து வழித்தடங்களிலும் தண்ணீர சூழ்ந்துள்ளதால் நந்தி மங்கலம் கிராமம் தனித்தீவு போல் ஆனது.மேலும், நந்திமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் ஏரி ஓடை கால்வாய் அருகே தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். தற்போது ஓடை கால்வாயில் அதிகளவு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும், நந்திமங்கலம் ஏரி கடை வாசல் பலவீனம் காரணமாக கடை வாசல் உடைந்து ரமேஷின் வீடு வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அந்த வீட்டில் இருப்பவர்களை மீட்கக்கோரி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா நரசிம்மன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் தாசில்தார் வெற்றி குமார் தலைமையில் சோளிங்கர் தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் நந்திமங்கலம் கிராமத்திற்கு விரைந்து சென்று ஓடையின் இருபுறங்களிலும் கயிறுகள் கட்டி பொதுமக்கள் உதவியுடன் ரமேஷின் மனைவி சத்யா(35), அவரது மகன் சாய்ராம்(17), காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சந்திரன்(60), காசியம்மாள்(55) ஆகிய நான்கு பேர் மற்றும் 10 ஆடுகளை பத்திரமாக மீட்டனர்.  மீட்பு பணியின்போது சோளிங்கர் எம்எல்ஏ ஏ.எம்.முனிரத்தினம், ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், பிடிஓ அன்பரசன், விஏஓ சிவகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய தீயணைப்பு வீரர்

4 பேரையும் மீட்க தீயணைப்பு மீட்பு படை வீரர் சின்னமுத்து என்பவர் கயிற்றை பிடித்தபடி மறு கரைக்கு சென்றார். அப்போது வெள்ளம் அவரை வேகமாக இழுத்துச் சென்றது. இதனால் கயிற்றிலிருந்து கைப்பிடி விலகி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரது இடுப்பில் கட்டப்பட்டிருந்த கயிற்றை உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் சக வீரர்கள் இழுத்து சின்னமுத்துவை காப்பாற்றினர். இந்நிலையில், மீட்பு பணியின்போது பேருதவியாக இருந்த கொடைக்கல் பகுதியைச் சேர்ந்த நான்கு இளைஞர்களை பாராட்டி எம்எல்ஏ முனிரத்தினம் ₹3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கினார்.

Related Stories: