மதுரை: கஞ்சாவை சட்ட ரீதியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பீர்களா? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கலாவதி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள கல்லூத்து கிராமத்தில் புதிய டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, வேலுமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சட்டவிரோதமாக மது விற்பனை மற்றும் போலி மதுபான விற்பனை நடைபெறுவதால் அங்கு டாஸ்மாக் கடை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.