முதல்வர் குறித்து அவதூறு பேச்சு: பாஜ மாநில நிர்வாகி கைது

சென்னை: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு பாஜ சார்பில் மாவட்ட தலைவர் ஐயப்பன் தலைமையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜ ஓபிசி பிரிவு மாநில துணைத்தலைவர் அகோரம், தமிழக முதல்வரை அவதூறாகவும், இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் ஜெயங்கொண்டம் போலீசார் நேற்றுமுன்தினம் அகோரம் மீது 4 பிரிவின் கீழ் வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில், அகோரத்தை கைது செய்ய ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டிற்கு நேற்று சென்றனர். திருவெண்காடு சரபோஜி அக்ரகார தெருவில் உள்ள அகோரம் வீட்டிற்கு சென்ற போது அங்கு அவர் இல்லை. சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து சீர்காழி டிஎஸ்பி லாமேக் தலைமையில் சென்ற ஜெயங்கொண்டம் போலீசார், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த அகோரத்தை கைது செய்தனர்.

பின்னர் ஜெயங்கொண்டத்திற்கு பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த வழக்கில் கைதான அகோரம் மீது கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More