கன்னிகைப்பேர் பகுதியில் சாலையின் இருபுறமும் ஆறாக ஓடிய உபரிநீர்: கடும் போக்குவரத்து நெரிசல்

ஊத்துக்கோட்டை: கன்னிகைப்பேர் பகுதியில் ஏரி உபரிநீர் சாலையின் இருபுறமும், வெள்ளப்பெருக்காக ஓடியதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் பெரிய ஏரி உள்ளது. வடமதுரை, ஜெயபுரம், ஆலப்பாக்கம், அத்திவாக்கம் ஆகிய பகுதிகளில் பெய்த மழைநீர் வரத்தால் இந்த ஏரியில் தண்ணீர் நிரம்பியது. இதனால், இதன் உபரிநீர் வெளியேறி சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் வெள்ளமாக ஓடுகிறது.

இதையொட்டி, சென்னை கோயம்பேடு, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து பெரியபாளையம் நோக்கி வரும் வாகனங்களும், ஆந்திர மாநிலம் திருப்பதி, புத்தூர் மற்றும் ஊத்துக்கோட்டையில் இருந்து சென்னை சென்ற வாகனங்களும் நேற்று கன்னிகைப்பேர் ஏரிக்கரை அருகே செல்லமுடியாமல் தத்தளித்து சென்றன. ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறி சாலையின் இருபுறமும் செல்வதாலும், சாலையில் ஏற்பட்ட பள்ளத்தாலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவலறிந்து பெரியபாளையம் போலீசார், கன்னிகைப்பேர் பகுதிக்கு சென்று போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர். இதற்கிடையில், ஏரியில் இருந்து வெளியேறிய உபரிநீர்  கன்னிகைப்பேர் அரசு மேல்நிலைப்பள்ளியில் புகுந்தது. இதனால், பள்ளி வளாகத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கியது. இதையொட்டி, பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. இதுதொடர்பான செய்தி, தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது.

இதைதொடர்ந்து, ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமன் மற்றும் பொதுப்பணிதுறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆ.சத்தியவேலு ஆகியோர் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர், அங்கு குளம்போல் தேங்கிய தண்ணீரை பொக்லைன் இயந்திரம் மூலம் வெளியேற்றி சுத்தம் செய்தனர். தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தால் இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

More